திட்டமிட்டு செயலாற்றி வெற்றி காணும் கும்ப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சுக ஸ்தானாதிபதி சுக்ரனும் சஞ்சரிப்பதால், சுகங்களும், சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் யோகங்களும் உண்டு. இரண்டில் இருக்கும் ராகுவால் திரண்ட செல்வங்களும் வரலாம். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வழியில் பகை பாராட்டாமல் நடந்துகொள்வது நல்லது.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வக்ரம் பெறும்போது உடன்பிறப்புகளின் ஆதரவு கொஞ்சம் குறையலாம். பாகப்பிரிவினை சம்பந்தமாக ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் முடிவடையாமல் போகலாம். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு குறையும். வேலையாட்களாலும் சில பிரச்சினைகள் வரலாம். இருப்பினும் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்கவர்கள் நீங்கள். தொழில் ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், புதிய யுக்திகளைக் கையாண்டு வளர்ச்சி காண்பீர்கள்.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அஷ்டமாதிபதியான புதன் விரய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அதே நேரம் பஞ்சமாதிபதியாகவும் புதன் விளங்குவதால், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வலிமை இழக்கிறார். எனவே மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறலாம். உற்றார்- உறவினர்களால் உருவாகும் பிரச்சினைகள் உள்ளத்தை நெருடும். பத்திரப் பதிவுகளில் தாமதம் ஏற்படலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி உண்டு.
கும்ப - புதன்
தை 23-ந் தேதி உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். இது ஒரு உன்னதமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை படிப்படியாகக் குறையும். கவலைக்குரிய தகவல்கள் உங்களை விட்டு விலகும். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபடுவீர்கள்.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு தேடி வரும். தன -லாபாதிபதி பலம் பெறுவதால் பொருளாதாரப் பிரச்சினை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றம், நாடு மாற்றம் விருப்பம் போல் அமையும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக பாராட்டு குவியும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர். கலைஞர்களுக்கு கனவுகள் நனவாகும். மாணவ - மாணவிகள் பாராட்டுக்களைப் பெறுவர். பெண்களுக்கு மனநிறைவான வாழ்க்கை அமையும். வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 14, 15, 21, 22, 27, 28, பிப்ரவரி: 2, 3, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.