அறிந்து கொள்ளுங்கள்

10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் அமேசான் - ஊழியர்கள் அதிர்ச்சி!

Published On 2022-11-15 05:07 GMT   |   Update On 2022-11-15 05:07 GMT
  • ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்.
  • முன்னதாக ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.

தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் வரும் நாட்களில் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அதிரடியாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. நிர்வாக சீரமைப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்ட காரணங்களை சொல்லி இந்த நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் பணியாற்றும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் பணிநீக்க நடவடிக்கை இந்த வாரத்தில் இருந்தே துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 ஆயிரம் பேர் என்பது மூன்று சதவீதம் தான் என கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் அமேசான் நிறுவனத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அமேசான் சாதனங்கள், அலெக்சா, சில்லறை பிரிவு மற்றும் மனிதவளங்கள் துறை உள்ளிட்ட பிரிவுகளில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கடந்த சில வாரங்களாக ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது. ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஒட்டுமொத்த ஊழியர்களில் 13 சதவீதம் அதாவது 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

அமேசானில் பணிநீக்க நடவடிக்கை தொடர்பான தகவல் வெளியாகும் முன்பு தான் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது வாழ்நாள் முடிவதற்குள் ரூ. 10 லட்சத்து 04 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான தொகையை நன்கொடையாக வழங்க விரும்புவதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.  

Tags:    

Similar News