என் மலர்
கடகம்
2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்
மன மகிழ்ச்சி
புத்துணர்வு மிகுந்த கடக ராசியினரே!
செயலாற்றல் நிறைந்த கடக ராசியினருக்கு பிறக்கப்போகும் விசுவாசு ஆண்டு வாழ்வில் மறக்க முடியாத நல்ல மாற்றங்களை தரப்போவது நிச்சயம். நினைத்தது நிறைவேறக் கூடிய நல்ல ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டின் கிரக நிலவரத்தைப் பொறுத்தவரை பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் நிற்கிறார். தனது 3ம் பார்வையால் 11ம்மிடமான லாப ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் உப ஜெய ஸ்தானமான 3ம் மிடத்தையும், தனது 10ம் பார்வையால் 6ம்மிடமான ருண,ரோக, சத்ரு ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
12ம்மிடமான அயன, சயன, விரய ஸ்தானத்திற்குச் குரு பகவான் செல்கிறார். தனது 5ம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 6ம்மிடமான ருண,ரோக, சத்ரு ஸ்தானத்தையும், 9ம் பார்வையால்8ம் மிடமான அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
கேது பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும், ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் செல்கிறார்கள். வருட கிரகங்கள் இந்த தமிழ் புத்தாண்டில் வழங்கக் கூடிய பலன்களைப் பார்ப்போம்.
விசுவாவசு ஆண்டின் பொது பலன்கள்
இந்த ஆண்டு உங்களுக்கு சனி பகவான் மிக மிகச் சாதகமாக உள்ளார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்ற கூற்று உங்களுக்கு மிகவும் பொருந்தும். பாக்கிய ஸ்தான சனி பகவான் இந்த ஜென்மத்தில் நீங்கள் அடைய வேண்டிய அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் வாரி வழங்கப்போகிறார்.
அதை பெற்றுக் கொள்ள தசா புத்தி மட்டும் சாதகமாக இருந்தால் போதாது. பொறுமையின் மறு உருவமான நீங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை தக்க வைக்க அதிக முயற்சியும் செய்ய வேண்டும். கடமைகளை தெளிவான மனநிலையோடு செய்து முடிக்க குருபகவான் ஆசி வழங்குவார்.
ஆன்ம பலம் பெருகி உடல் பொலிவு ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள்.
சமூகத்தில் மதிப்பு மரியாதை ,பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும்.பரந்த மனப்பான்மை, தாராள குணம் ஏற்படும்.உயர்குலத்தவராலும், உறவினர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும். நேர்மை, நாணயத்தை கட்டி காப்பாற்றும் எண்ணம் தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும்.
சுப நிகழ்வுகள், ஆடம்பர விருந்துகள் , ஆடம்பர உணவு விடுதிக்கு செல்லுதல் போன்ற பொழுபோக்கு இடங்களுக்கு சென்று உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள். வாக்கு வன்மை பெறும். கொடுத்த வாக்கை எளிதாக காப்பாற்றி விடுவீர்கள். குழந்தைகளின் நலனில் ஆர்வம் உருவாகும்.
மதப்பற்று மிகும்.குரு பக்தியும் ஏற்படும். இது வரை கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட ப்ரபஞ்ச சக்தியை உணர்வார்கள். இதுவரை தடைபட்டிருந்த குலதெய்வ வழிபாடு தொடரும். குலதெய்வ அனுக்கிரகம் ஏற்படும்.குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வத்தை அறிந்து கொள்ளும் காலம் வந்த விட்டது.
நீண்ட நெடு நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த வேண்டுதல்கள், பிரார்த்தனைகளை நிறைவேற்றி முடிப்பீர்கள். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் . செயற்கை கருத்தரிப்பை நாடி மன வேதனை அடைந்தவர்கள் இயற்கையாக பாக்கிய பலத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.
உங்களின் 4ம் அதிபதி சுக்கிரன் என்பதால் ஆடம்பர வீடு, ஆடம்பர கார் வாங்கும் வாய்ப்பு உண்டு. தடைபட்ட வீடு , வாகன யோகம் பிராப்தம் கிட்டும்.அரசு வகை ஆதாயம் நிச்சயம் உண்டு. வயதான தாய் தந்தையர்கள் பிள்ளைகளால் நன்கு பராமரிக்கப்படுவார்கள்.
பொருளாதாரம்
பண பர ஸ்தானமான 2,8ம் மிடத்தில் ராகு கேதுக்கள் நிற்பதால் தன வரவு இரட்டிப்பாகும். செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிப்பு உயரும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும்.
எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் பணம் வராது. பணம் தேவைக்கு வரும் காலம். உபரியாக வரும் காலம், கணக்கிட முடியாது வரும் காலம் என்று மூன்று விதம் உண்டு. இதில் இப்போது நீங்கள் மூன்றாவது நிலை.
பணத்தை முறையாக பயன்படுத்துதல் நல்ல முதலீடு செய்தல் என்பது ஒரு கலை. பாக்கிய ஸ்தானம் பலம் பெறும் இந்த காலத்தில் பணத்தை எதிர்கால தேவைக்காக திட்டமிட்டு சேமிப்பது நல்லது.
புனர்பூசம் 4
சொல்வாக்கு உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.
பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். கற்பனை சக்தி,சாத்வீக குணம்,எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.எதிரிகள் ஒதுங்குவார்கள். வங்கிகள் , நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும்.
தந்தை வழியில் இருந்த பிரச்சனைகள் சங்கடங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த மன சஞ்சலத்திலிருந்து விடுபடுவீர்கள்.
பூசம்
தெளிவான மனநிலையோடு செயலாற்றுவீர்கள். நடக்குமா என்ற காரியத்தை தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பலவிதமான வாழ்வியல் மற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும். தாய், தந்தையின் அன்பும் நல்லாசிகள் கிடைக்கும்.
பித்ருக்களின் நல்லாசிகள் கிடைகும். பல தலைமுறையாக தீர்க்க முடியாத பித்ரு தோஷத்தை முறையான பித்ருக்கள் வழிபாட்டை கடைபிடித்து சரிசெய்வீர்கள்.பல தலைமுறையாக பல வருடங்களாக கண்டு பிடிக்க முடியாத, தெரியாத பூர்வீகம், குலம், கோத்திரம்,குல தெய்வம் பற்றிய தகவல் கிடைக்கும்.
சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ்வார்கள்.ஒரு சிலர் பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவீர்கள்.எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வைத்தியத்தில் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த குடும்ப சொத்து விவகாரம் சட்டத்தின் உதவியை நாட வைக்கும். தந்தையின் ஆரோக்யம் கவலைக்கிடமாக இருக்கும் எனினும் ஆயுள் குற்றம் இல்லை.
ஆயில்யம்
தொட்டது துலங்கும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆழ்மன சிந்தனை பெருகும். ஒரு இடத்தில் நிலையாக இருக்காமல் சுறுசுறுப்பாக இயங்கி புதிய முயற்சி செய்து கொண்டே இருப்பீர்கள். கடனாலும், நோயாலும், வம்பு வழக்காலும் பட்ட அவஸ்தை குறையத்துவங்கும்.
கொடுக்கல் வாங்கல், சுமூகமாகும். வரா கடன்கள் வசூலாகும்.திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். தாய், தந்தை வழி உறவுகளின் அன்பும், அரவணைப்பும் கூடும்.உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரக்கூடிய வகையில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்போகிறது.
பதினாறு வகைச் செல்வங்களும் நிரம்பும். ஆடம்பரமான சொத்துக்கள் சேரும். தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து மகிழ்ச்சி நிலவும்.
திருமணம்
குடும்ப ஸ்தானத்தில் கேது. அஷ்டம ஸ்தானத்தில் ராகு. சோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. 8ம்மிடத்திற்கு குருவின் 9ம் பார்வை பதிவதால் முறையான சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.
அதே போல் 7.6.2025 வரை மாங்கல்ய காரகன் செவ்வாய் சாதகமாக இல்லை. எனவே சுய ஜாதக ரீதியான பரிசீலினைக்கு பிறகு திருமணத்திற்கு முயற்சிக்கவும்.
பெண்கள்
கடக ராசிப் பெண்களுக்கு இது பொற்காலம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த உங்களின் தாய் வழி சீதனம் உங்களை தேடி வரும்.
கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நனவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும்.கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். அஷ்டம ஸ்தான ராகுவால் லெளகீக விசயங்களில் நாட்டம் அதிகரிக்கும்
பரிகாரம்:
வயதானவர்களின் ஆன்மீக சுற்றுப்பயண ஆசையை நிறைவேற்ற பொருள் உதவி செய்தல் நலம் தரும். கோவில் குளத்தில் உள்ள மீனுக்கு பொரி போட வேண்டும்.






