என் மலர்
ஆட்டோமொபைல்
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
- 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள்.
உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கணிசமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுகளில் ஒப்பிடும் போது, வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் அறிமுகம் செய்து வருகின்றன.
அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் எலெக்ட்ரிக், டாடா பன்ச் எலெக்ட்ரிக், மஹிந்திரா நிறுவனத்தின் BE 6E, XEV 9e, எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் வின்ட்சர், கியா நிறுவனத்தின் EV9 உள்பட பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யபபட்டுள்ளன. இவைதவிர ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் மேம்பட்ட வெர்ஷன்களும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை 2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி எலெக்ட்ரிக் வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 26.5 சதவீதம் அதிகரித்து 1.94 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதனை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1.5 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இது, நாட்டின் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை 7.46 சதவீதமாக உயர்த்தியது. இது 2023 ஆம் ஆண்டு 6.39 சதவீதமாக இருந்தது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வரும் போதிலும், பெட்ரோல் வாகனங்கள் ஆதிக்கம் தொடர்கிறது. இந்த ஆண்டு விற்பனையான ஒட்டுமொத்த (26.04 மில்லியன்) வாகனஹ்களில் 73.69 சதவீதம் (19.18 மில்லியன்) யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும்.
இதில் 10.5 சதவீதம் (2.62 மில்லியன்) யூனிட்கள் டீசல் மாடல்கள், 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள் ஆகும். 2024 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் வாகனத்திற்கு இணையாக 12.43 பெட்ரோல்-சி.என்.ஜி, ஹைப்ரிட், டீசல் மாடல்கள் அடங்கும்.
மாதாந்திர விற்பனை:
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முறையே 1,45,064 மற்றும் 1,41,740 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மார்ச் மாதத்தில் 2,13,068 யூனிட்களாக அதிகரித்தது. பிறகு ஏப்ரல், மே மாதங்களில் குறைந்து 1,15,898 மற்றும் 1,40,659 யூனிட்களாக இருந்தது. ஜூன் மாதத்தில் 1,40,137 யூனிட்கள் விற்பனையானது.
2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையானது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2,19,482 யூனிட்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிக வாகனங்கள் விற்பனையா மாதமாக அமைந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த எண்ணிக்கை 1,92,575 மற்றும் 1,32,302 யூனிட்களாக சரிந்தது.
எனினும், இந்த ஆண்டு முழுக்க ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறைந்தபட்சம் ஒரு லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாகவே இருந்துள்ளது.
மத்திய அரசு திட்டம்:
இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்து ஃபேம் 2 திட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1,15,898 யூனிட்களாக சரிந்தது.
இதன் பிறகு, பண்டிகை காலம் மற்றும் பிரதமரின் இ-டிரைவ் திட்டம் காரணமாக மீண்டும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள காலக்கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உற்பத்தியாளர்கள் சமீப காலங்களில் அறிமுகம் செய்துள்ள புதிய மாடல்கள் மற்றும் புத்தாண்டு பிறப்பை ஒட்டி வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
- அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட்.
- இந்த கார் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், இந்த ஆண்டு ஏராளமான கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2024 ஆண்டு துவக்கமே, கார் மாடல்கள் விலை ஏற்றத்துடன் துவங்கியது. எனினும், அதன்பிறகு முன்னணி கார் பிராண்டுகள் புதிய கார் மாடல்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்தன.
பதிய கார் மாடல்களில் சில கார்கள் ஏற்கனவே செய்யப்பட்ட மாடல்களின் வருடாந்திர அப்டேட் செய்யப்பட்டவைகளாக இருந்தன. சில மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. எதுவாயினும், இந்த ஆண்டு அறிமுகமானதில், பிரபல கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
கியா கார்னிவல்:
கியா இந்தியா நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. மாடலை அதிகளவு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த காரில் ஏராளமான மாற்றங்களுடன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
நிசான் மேகனைட்:
இந்திய சந்தையில் நிசான் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட். இந்த மாடலின் புது வெர்ஷனும் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ஒட்டுமொத்த டிசைன் மாற்றப்பட்டு, புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா கைலக்:
இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்யும் குறைந்த விலை எஸ்.யு.வி. மாடலாக கைலக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தலான டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களுடன் ஸ்கோடா கைலக் மாடல் வெளியிடப்பட்டது.
கியா EV9:
கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக EV9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாக்ஸி டிசைன் கொண்டிருக்கும் கியா EV9 ஏராளமான கனெக்டெட் அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
டாடா கர்வ்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் மாடலின் ஐ.சி. எஞ்சின் வெர்ஷன் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் அறிமுக விலை ரூ. 10 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்:
இந்த ஆண்டு துவக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா 2024 ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மஹிந்திரா XUV 3XO:
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக XUV 3XO அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய கேபின் டிசைன் கொண்டிருக்கும் XUV 3XO இரட்டை 10.25 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்களை புதிய மஹிந்திரா XUV 3XO கொண்டுள்ளது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர்:
2024 மாருதி சுசுகி டிசையர் மாடல் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த காரின் விலை ரூ. 6.79 லட்சத்தில் துவங்கி ரூ. 10.14 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கவுள்ளது.
- சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்து வருகின்றன.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மற்றும் ஹோண்டா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உலகின் 3 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறவுள்ளது.
நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கவுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகஸ்ட் 2026 இல் டோக்கியோ பங்குச் சந்தையின் பிரைம் சந்தையில் பட்டியலிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த 2 நிறுவனங்களின் இணைப்பும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.
- காரின் விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி.
மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e-Vitara காரின் ஃபர்ஸ்ட் டீசரை நேற்று வெளியிட்டது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் தொடங்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் நிறுவனம் இதனை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது ஜனவரி 17 முதல் 22 வரை நடைபெறுகிறது. இந்த மின்சார எஸ்யூவி வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா EV உடன் போட்டியிடும்.
நிறுவனத்தின் தாய் நிறுவனமான Suzuki Motor Corporation, இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற மோட்டார் ஷோவான EICMA-2024 இல் உலகளாவிய சந்தையில் இதை வெளிப்படுத்தியது. e-Vitara என்று அழைக்கப்படும், இது நடுத்தர அளவிலான மின்சார SUV EVX இன் production version ஆகும், இது முதலில் Auto Expo-2023ல் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் Global Mobility Show-2025இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த மின்சார எஸ்யூவியின் உற்பத்தி பிப்ரவரி-2025 முதல் Suzuki Motor Gujarat Private Limited ஆலையில் தொடங்கும். இது ஜூன் மாதத்திற்குள் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இ-விட்டாரா ஒய்-வடிவ LED ஹெட்லேம்ப்கள், இணைக்கப்பட்ட டெயில்லேம்ப்கள் மற்றும் தடிமனான பின்புற பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்னர், சார்ஜிங் போர்ட் முன் இடது ஃபெண்டரில் வைக்கப்படுகிறது. பின்புற கதவு கைப்பிடிகள் சி-பில்லரில் அமைந்துள்ளன.
மேலும், இ-விட்டாராவில் இரட்டை டேஷ்போர்டு திரைகள், வயர்லெஸ் சார்ஜர், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, காற்றோட்டமான முன் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்ட் செயல்பாடு மற்றும் லெவல் 2 ஏடிஏஎஸ் பேக் செய்யப்பட்ட கேபின் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
49kWh பேட்டரி பேக் கொண்ட இ-விட்டாரா காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். காரின் விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
- புதிய கியா சைரோஸ் மாடல் எட்டுவித நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த கார் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சைரோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி-எஸ்யுவி மாடல் சொனெட் மற்றும் செல்டோஸ் மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய கியா சைரோஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஜனவரி 3ம் தேதி துவங்குகிறது.
புதிய கியா சைரோஸ் மாடல்: HTK, HTK (O), HTK+, HTX, HTX+ மற்றும் HTX+ (O) என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் கிளேசியர் வைட் பியல், ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, இன்டென்ஸ் ரெட், இம்பீரியல் புளூ, பீவ்டெர் ஆலிவ், அரோரா பிளாக் பியல் மற்றும் ஃபிராஸ்ட் புளூ என எட்டு வித நிறங்களில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை கியா சைரோஸ் மாடலில் இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள், வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புதிய ஸ்டீரிங் வீல், லெவல் 2 ADAS, 360-டிகிரி கேமரா, முன்புற இருக்கைக்கு ரிக்ளைன் வசதி மற்றும் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மெக்கானிக்கல் அடிப்படையில் கியா சைரோஸ் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு மாடல்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு DCT மற்றும் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
- ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை உயர்த்தப்படுகிறது.
- விலை உயர்வு பற்றிய தகவல் வெளியானது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரிஸ்டா மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 4 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 6 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் ஏத்தர் ரிஸ்டா மாடல் S, Z 2.9 மற்றும் Z 3.7 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும்.
இத்துடன் ப்ரோ பேக் வாங்கும் போது மூன்று வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 13 ஆயிரம், ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கும். 2025, ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து ஏத்தர் ரிஸ்டா மாடலின் விலை உயர இருக்கும் நிலையில், எந்த வேரியண்டிற்கு எவ்வளவு விலை உயரும் என்பது பற்றிய தகவல் இல்லை.
- இந்திய சந்தையில் இது 9-வது தலைமுறை கேம்ரி மாடல் ஆகும்.
- இது 230 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேம்ரி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முற்றிலும் புதிய டொயோட்டா கேம்ரி கார் மாடலின் விலை ரூ. 48 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இது 9-வது தலைமுறை கேம்ரி மாடல் ஆகும்.
புதிய டொயோட்டா கேம்ரி மாடல் சிமென்ட் கிரே, ஆட்டிட்யூட் பிளாக், டார்க் புளூ, எமோஷனல் ரெட், பிளாட்டினம் வைட் பியல் மற்றும் பிரெஷியஸ் மெட்டல் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 230 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.
இத்துடன் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காரில் ஸ்போர்ட், இகோ மற்றும் நார்மல் என மூன்றுவித டிரைவ் மோட்கள் உள்ளது. இதில் C வடிவ எல்இடி டிஆர்எல்கள், மெல்லிய கிரில், அகலமான ஏர் டேம், ஏர் வென்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உள்புறத்தில் 360 டிகிரி கேமரா, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ADAS சூட், புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.
- பன்ச் மற்றும் நெக்சான் மாடல்களை முந்தியுள்ளது.
- இந்த கார் ஒன்பது மடங்கு அதிக யூனிட்கள் விற்பனை.
மாருதி சுசுகி நிறுவனம் தனது Fronx மாடல் காரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த கார் உள்நாடு மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் Fronx மற்றம் பிரெஸ்ஸா மாடல்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மற்றும் நெக்சான் மாடல்களை முந்தியுள்ளது.
இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற Fronx மாடல் கடந்த அக்டோபர் மாதம் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஜப்பான் நாட்டில் அமோக வரவேற்பை பெற்றது. ஒரு மாதத்தில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதை விட இந்த கார் ஒன்பது மடங்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
கடந்த மாதம் இந்த காரின் ஏற்றுமதி மட்டும் 11.49 சதவீதமாக இருந்தது. உள்நாட்டிலும் இந்த கார் புதிய சாதனை படைத்துள்ளது. அதிவேகமாக 2 லட்சம் யூனிட்கள் விற்பனையான கார் மாடல் என்ற பெருமையை Fronx பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான கார்களில் இரண்டாவது இடம் பிடித்தது.
இந்தியாவில் மட்டும் இந்த கார் 16 ஆயிரத்து 419 யூனிட்கள் விற்பனையான நிலையில், ஏற்றுமதியில் 15 சதவீத பங்குகளுக்கும் அதிகமாக பெற்று அசத்தியது.
- டிவிஎஸ் நிறுவனம் ரோனின் பைக்கை அப்டேட் செய்தது.
- புதிய பைக்கின் விற்பனை அடுத்த ஆண்டு துவங்குகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோனின் 2025 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகப்படுத்தியது. மோட்டோசோல் 4.0 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட முற்றிலும் புதிய ரோனின் 2025 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அமைகிறது.
2025 டிவிஎஸ் ரோனின் மோட்டார்சைக்கிளின் விலை அடுத்த மாதம் அறிவிக்கப்படும். 2025 ரோனின் மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் சார்கோல் எம்பெர் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது முந்தைய ஆண்டு மாடலின் டெல்டா புளூ மற்று்ம ஸ்டார்கேஸ் பிளாக் நிறங்களுக்கு மாற்றாக அமைகிறது.
புதிய ரோனின் மாடல் SS, DS மற்றும் TD என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் DS வேரியண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிலும் 225.9சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.1 ஹெச்பி பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும்.
- ஆல்டோ K10 விலை ரூ. 3.99 லட்சம் விலையில் துவங்குகிறது.
ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், ஹூணடாய் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் வரிசையில், மாருதி சுசுகி நிறுவனமும் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகம் மற்றும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு துவங்கி மாருதி சுசுகி கார்களின் விலை உயர்கிறது. கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும்.
இந்திய சந்தையில் மாருதி சுசுகியின் ஆல்டோ K10 மாடல் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் விலையில் துவங்குகிறது. இத்துடன் இந்த நிறுவனத்தின் இன்விக்டோ மாடலின் விலை ரூ. 29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- இதற்கான பணிகள் கடந்த மாதம் முதலே நடைபெற்று வருகிறது.
- கான்செப்ட் மாடலை நிஜமாக்க திட்டமிட்டு வருகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் GB350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஹோன்டா CB350 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரெட்ரோ பைக் போன்ற தோற்றம், ஏர்-கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மோட்டார்சைக்கிள் நல்ல வரவேற்பை பெற காரணங்களாக மாறின.
GB350 சீரிசில் காலப்போக்கில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும், GB350C பைக் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், இதே சீரிசில் GB500 மோட்டார்சைக்கிளை ஹோண்டா உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், ஹோண்டா நிறுவனம் தனது கான்செப்ட் மாடலை நிஜமாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா நிறுவனம் GB500 என்ற பெயரை பயன்படுத்த டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் சர்வதேச சந்தையில் பல நாடுகளில் சமர்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த மாதம் முதலே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் சர்வதேச சந்தையில் விரிவாக்க பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், சக்திவாய்ந்த மாடல் மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் என்றும் ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்க நினைப்போருக்கு மாற்றாக புது பைக் என்ற ஆப்ஷனை இந்த மாடல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிஎம்டபிள்யூ கார் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த காரில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய M2 மாடலை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ M2 விலை ரூ. 1.03 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட புதிய பிஎம்டபிள்யூ கார் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ M2 மாடலில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் மூலம் புது M2 மாடல் 486 ஹெச்பி பவர், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4 நொடிகளுக்குள் எட்டிவிடும். எனினும், காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்களாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. M டிரைவர் பேக்கேஜ் பெறும் போது இந்த காரின் வேகத்தை மணிக்கு 285 கிலோமீட்டர்கள் வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
அப்டேட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ M2 மாடல் தற்போது- போர்டிமௌ புளூ, ஃபயர் ரெட், சௌ பாலோ எல்லோ மற்றும் ஸ்கை-ஸ்கிராப்பர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.