என் மலர்
பைக்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை திடீரென குறைத்த ஹீரோ மோட்டோகார்ப்
- ஹீரோ மோட்டோகார்ப் நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்துகிறது.
- விடா V1 சீரிஸ் விலை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது. முன்னதாக ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்று குறைக்கப்பட்டு இருக்கிறது.
விடா V1 பிளஸ் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் ப்ரோ வெர்ஷன் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் என்றும் மாறி இருக்கிறது. முன்னதாக விடா V1 ப்ரோ மாடல் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாடு முழுக்க விடா V1 சீரிஸ் விலை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி குஜராத் மாநிலத்தில் விடா V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதில் மாநிலம் சார்பில் வழங்கப்படும் மாணியங்களும் அடங்கும்.
விலைகுறைப்பு மட்டுமின்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி நாடு முழுக்க 100 நகரங்களில் விடா V1 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பெங்களூரு, ஜெய்பூர் மற்றும் டெல்லியை தொடர்ந்து அதிக நகரங்களில் விடா V1 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி பூனே, ஆமதாபாத், நாக்பூர், நாசிக், ஐதராபாத், சென்னை, கோழிக்கோடு மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் விடா V1 சீரிஸ் விற்பனை நடைபெற்று வருகிறது.






