என் மலர்
பைக்

இந்திய சோதனையில் சிக்கிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர்
- கேடிஎம் நிறுவனத்தின் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படுகிறது.
- இந்திய சோதனையில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.
கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் முதல் முறையாக வெளியாகி உள்ளது. பூனேவை அடுத்த சக்கன் ஆலை அருகில் இந்த மோட்டார்சைக்கிள் பாகங்கள் பிக்-அப் டிரக்-இல் எடுத்துவரப்பட்டு இருக்கிறது.
இந்திய சோதனையை அடுத்து புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதவிர இந்திய பைக் வார நிகழ்வில் காட்சிப்படுத்தும் நோக்கில் கேடிஎம் தனது 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளின் சில யூனிட்களை மட்டும் இந்தியா கொண்டுவந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக 2019 வாக்கில் நடைபெற்ற இந்திய பைக் வார நிகழ்வின் கேடிஎம் அரங்கில் 1290 சூப்பர் டியூக் மற்றும் 790 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை கொண்டுவந்திருந்தது. எனினும், இந்த மாடல்கள் எதுவும் இந்திய சந்தையில் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மாடல் ஏராளமான எலெக்டிரானிக் அம்சங்கள், பிரீமியம் ஹார்டுவேர் மற்றும் செயல்திறன் மிக்க என்ஜின் கொண்டிருக்கிறது.
இந்த மாடலில் 889சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 104 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல், 6டி சென்சார், ஆஃப்-ரோடு ஏபிஎஸ், கார்னெரிங் ஏபிஎஸ் மற்றும் நான்கு ரைடிங் மோட்கள் கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளில் ஐந்து இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே, புதிய கிராபிக்ஸ், மேம்பட்ட நேவிகேஷன் சிஸ்டம், யுஎஸ்பி சி கனெக்டர், 21-18 இன்ச் ஸ்போக் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், 48 எம்எம் யுஎஸ்டி முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900, பிஎம்டபிள்யூ F850 GS அட்வென்ச்சர் மற்றும் டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Photo Courtesy: ZigWheels






