search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு
    X

    நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு

    • தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய ஒரு நிலத்தை வேண்டுமென்றே சிங்கமுத்து எனக்கு வாங்கிக் கொடுத்தார்.
    • சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    1991-ம் ஆண்டு முதல் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்தேன். என்னுடைய கடும் உழைப்பால் முன்னேறி, 300 படங்களுக்கு மேல் நடித்து, பிரபல நகைச்சுவை நடிகரானேன். இன்றளவும் என்னுடைய நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எதிர்மனுதாரர் நடிகர் சிங்கமுத்துவும், நானும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒன்றாக பல படங்களில் நடித்தோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், புகழையும் தந்தது.

    ஒரு காலக்கட்டத்தில், எனக்கு கிடைக்கும் வரவேற்பு சிங்கமுத்துவுக்கு கிடைக்காததால், அவருக்கு பொறாமை உண்டானது. அதனால், என் மீது பகை கொண்டார். 2015-ம் ஆண்டுக்கு பின்னர், என்னைப் பற்றி மோசமாக பேசத் தொடங்கினார். அதனால், அவர் இல்லாமல் நடிக்கத் தொடங்கினேன்.

    இதற்கிடையில் தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய ஒரு நிலத்தை வேண்டுமென்றே சிங்கமுத்து எனக்கு வாங்கிக் கொடுத்தார். இதுகுறித்து சிங்கமுத்துவுக்கு எதிராக எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். அதுமட்டுமல்ல ஒரு துளி உண்மைக்கூட இல்லாத பல பொய்களையும் கூறியுள்ளார். இது எனக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை சிங்கமுத்து ஏற்படுத்தியுள்ளார்.

    அதனால், 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். என்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.ஜி.ரகுநாதன், என்.செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×