search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது நடிகர் விமல் தொடர்ந்த வழக்கு ரத்து
    X

    தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது நடிகர் விமல் தொடர்ந்த வழக்கு ரத்து

    • கடனை திருப்பி செலுத்தாததால் 2020-ம் ஆண்டு நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கை பைனான்சியர் கோபி தொடர்ந்தார்.
    • கோபி தரப்பிலும் சிங்காரவேலன் தரப்பிலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்த 'மன்னர் வகையறா' என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூ.5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின்போது நடிகர் விமலால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில் நடித்தும், வேறு படங்களை தயாரித்து அதிலிருந்து வரும் லாபத்திலிருந்தும் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக 2018-ம் ஆண்டு உத்தரவாதம் நடிகர் விமல் அளித்திருந்தார். ஆனால் சொன்னபடி கடனை திருப்பி செலுத்தாததால் 2020-ம் ஆண்டு நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கை பைனான்சியர் கோபி தொடர்ந்தார்.

    வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் தப்பிப்பதற்காக குறுக்கு வழியில் இறங்கிய நடிகர் விமல் கடன் கொடுத்த கோபி, கடனுக்கு பரிந்துரை செய்த கோபியின் நண்பரும் 'லிங்கா' பட விநியோகஸ்தருமான சிங்காரவேலன் மற்றும் சிங்காரவேலனின் மேலாளர் விக்னேஷ் ஆகியோர் கூட்டு சதி செய்து தன்னை ஏமாற்றி தன் வங்கிக் கணக்கிலிருந்து தனக்கே தெரியாமல் ரூபாய் இரண்டு கோடியை எடுத்து விட்டதாக கூறி 2021-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அதிகார வர்க்கத்தினரின் மூலம் அழுத்தத்தையும் கொடுத்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி சிங்காரவேலன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். கோபி மற்றும் விக்னேஷ் உயர்நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்று கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பினர். அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் தங்கள் மீது ஆதாரமற்ற பொய்யான வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதியரசர் சதீஷ்குமார் காவல்துறையினர் இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், 2023-ம் ஆண்டு வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மேற்கண்ட வழக்கை விசாரித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் இரண்டு மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன் பின்னரும் வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றம் இல்லாததால் 2024-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான காவல்துறை தரப்பு இரண்டு வாரங்களுக்குள் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக உத்தரவாதம் அளித்தது.

    அதன் பின்னர் இந்த வழக்கில் வேகம் காட்டிய காவல்துறை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டது. கோபி தரப்பிலும் சிங்காரவேலன் தரப்பிலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    ஆவணங்களின் அடிப்படையில் கோபி, சிங்காரவேலன் மற்றும் விக்னேஷ் மீது நடிகர் விமல் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்திற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனவும், ஆதாரங்கள் எதையும் நடிகர் விமல் சமர்பிக்காத காரணத்தினாலும், மேற்படி வழக்கை மேல் விசாரணை ஏதுமின்றி முடித்து கொள்வதாக கூறி நீதிமன்றத்தில் விருகம்பாக்கம் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

    இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வாளர் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

    இதன் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தப்பிப்பதற்காக பைனான்சியர் கோபி மற்றும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஆகியோர் மீது நடிகர் விமல் கொடுத்திருப்பது பொய் புகார் என்பது நிரூபணமாகியுள்ளது.

    Next Story
    ×