search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இருதயக் கூடு எரிகிறது.. எவ்வளவுதான் பொறுமை காப்பது?- வைரமுத்து ஆவேசம்
    X

    "இருதயக் கூடு எரிகிறது.. எவ்வளவுதான் பொறுமை காப்பது?"- வைரமுத்து ஆவேசம்

    • டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
    • தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.

    சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.

    இந்நிலையில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள் என்று கவிஞர் வைரமுத்து கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழையும்

    தமிழ் நாட்டையும்

    திராவிடக் கருத்தியலையும்

    எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும்

    பல நிகழ்வுகளைக் கண்டும்

    காணாமல் போயிருக்கிறோம்

    ஆனால்,

    தமிழ்த்தாய் வாழ்த்தில்

    "தெக்கணமும் அதிற்சிறந்த

    திராவிடநல் திருநாடும்"

    என்ற உயிர் வாக்கியத்தைத்

    தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து

    தவிர்த்ததைக்

    காதும் கண்ணுமுள்ள தமிழர்கள்

    கடந்துபோக மாட்டார்கள்

    இருதயக் கூடு எரிகிறது

    எவ்வளவுதான்

    பொறுமை காப்பது?

    இந்தச் செயலுக்குக்

    காரணமானவர்கள்

    யாராக இருந்தாலும்

    தமிழர்கள் அவர்களை

    மன்னிக்கவே மாட்டார்கள்

    "திராவிட" என்ற

    சொல்லை நீக்கிவிட்டு

    தேசிய கீதத்தைப் பாடமுடியுமா?

    தமிழ்த்தாய் வாழ்த்தில்

    தவிர்ப்பதற்கு மட்டும்

    யார் தைரியம் கொடுத்தது?

    திராவிடம் என்பது நாடல்ல;

    இந்தியாவின்

    ஆதி நாகரிகத்தின் குறியீடு

    உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்

    இதுபோன்ற இழிவுகள்

    தொடர்ந்தால்

    மானமுள்ள தமிழர்கள்

    தெருவில் இறங்குவார்கள்;

    தீமைக்குத் தீயிடுவார்கள்

    மறக்க வேண்டாம்

    தாய்மொழி காக்கத் தங்கள்

    உடலுக்கும் உயிருக்குமே

    தீவைத்துக் கொண்டவர்கள்

    தமிழர்கள்

    அந்த நெருப்பின் மிச்சம்

    இன்னும் இருக்கிறது எங்களிடம்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×