என் மலர்
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கம் பஜ்ஜி, வடை சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றது - நடிகர் கருணாஸ் விமர்சனம்
- இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சல்லியர்கள்’.
- இந்த படத்தை கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர்.
'மேதகு' படத்தை இயக்கிய இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சல்லியர்கள்'. ஐ.சி.டபில்யூ நிறுவனம் சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சத்யா தேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன் மற்றும் மகேந்திரனும் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
சல்லியர்கள் பட இசை வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற்ற இந்தபடத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம்நாத் பழனிக்குமார், தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பெ.மணியரசன், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சட்ட தரணி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சல்லியர்கள் பட இசை வெளியீட்டு விழா
இந்நிகழ்ச்சியில் நடிகர் கருணாஸ் பேசியதாவது, "நான்கு நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்த சமயத்தில்தான் இயக்குனர் கிட்டு என்னை அழைத்து, மாவீரர் பிறந்தநாளில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தினால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டார். அப்படி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த விழா. இந்த படத்தில் எனது மகனின் நண்பர் ஈஸ்வரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். என் மகனும் அவனுடன் இணைந்து இசையமைப்பு பணிபுரிந்துள்ளார் என்றாலும் அவர் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்.
சல்லியர்கள் பட இசை வெளியீட்டு விழா
இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இங்கே தமிழகத்தில் விஸ்காம் படித்த மாணவர்களுக்கு படிப்பை முடித்தபின் நல்ல தளம் கிடைப்பதில்லை. வருடத்திற்கு 2500 மாணவர்கள் படித்துவிட்டு வெளிவருகின்றனர். இவர்களுக்கு உதவிசெய்ய வேண்டிய சினிமாவில் உள்ள தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் பஜ்ஜி, வடை சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
1985-லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் என்பதை பெருமையாக சொல்கிறேன். இன்று அவர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் கூட பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி பின்னால் வரும் கென், ஈஸ்வர் போன்ற இளைஞர்களிடம் கொடுத்து விடுகிறேன். அவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும். இதுதான் என்னுடைய விஷன்.. இதற்கு எவ்வளவு செலவானாலும் பத்து பேரிடம் பிச்சை எடுத்தாவது அந்த பணத்தை கொடுப்பேன்" என்று கூறினார்.