search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி !
    X

    ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி !

    • நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடித்துள்ள ’ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

    தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்'திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இதைத்தொடர்ந்து, கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பிலும் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜப்பான் படத்தின் கடைசி பாடல் காட்சிக்காக கார்த்தி நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த பிரமாண்டமான பாடலை படமாக்க பல கோடி மதிப்பிலான செட் அமைக்கப்படுகிறது.


    பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நலன் படத்தின் படப்பிடிப்பை முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு பெரிய படங்களை முடித்த பிறகு, கார்த்தியின் 27-வது படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

    2022 ஆம் ஆண்டில் 'பொன்னியின் செல்வன்- 1', 'விருமன்' மற்றும் 'சர்தார்' என மூன்று வெற்றிப்படங்களை தந்ததன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார் கார்த்தி. மேலும் 2023 ஆம் ஆண்டை 'பொன்னியின் செல்வன்- 2' எனும் பிளாப்பஸ்டர் வெற்றியுடன் துவங்கியுள்ளார். அடுத்ததாக ஜப்பான் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவரத் தயாராகி வருகிறது.


    கார்த்தி இந்த ஆண்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால், தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படப்பிடிப்புக்கு முன்பாகவே சிறந்த ஓடிடி தளங்கள், சாட்டிலைட் சேனல்கள் மற்றும் முக்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து வியாபார அழைப்பு வரப்பெற்று, லாபகரமான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. ப்ரீ ரிலீஸ் பிசினஸ் எனப்படும், பட வெளியீட்டுக்கு முன்பான வியாபாரத்தில் தற்போது நடிகர் கார்த்தியின் படங்கள் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, தீவிரமாகப் படங்களில் கார்த்தி நடித்து வருவது திரைத்துறையினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×