என் மலர்
சினிமா செய்திகள்
மறைந்த ஹரி வைரவன் குழந்தையின் கல்வி செலவை தான் ஏற்றுக் கொள்கிறேன் - விஷ்ணு விஷால் அறிவிப்பு
- வெண்ணிலா கபடி குழு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹரி வைரவன் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.
- மறைந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தைகளின் கல்விச் செலவை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 12.15 மணியளவில் இவர் காலமானார். இவருடைய இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது.
இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும் இவருடைய குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், மறைந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தையின் கல்விச் செலவை தான் முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "ஹரி வைரவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவர். கடைசி ஆறு மாதங்களாக அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். இது வெளிய யாருக்கும் தெரியாது. என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதை கடந்த ஆறு மாதங்களாக நான் செய்தேன்.
அவரது மனைவியிடமும் பேசினேன். என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன். குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என அவர்களிடம் சொன்னேன். வைரவன் அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ் கூட என்னிடம் உள்ளது. என்ன எப்பவும் மாப்ளனு தான் கூப்பிடுவாரு. அந்த மெசேஜில் தேங்க் யூ மாப்ள, நீ எனக்கு உதவி செய்றது ரொம்ப சந்தோஷம் என சொல்லி இருந்தார்" என்று விஷ்ணு விஷால் கூறினார்.