என் மலர்
சினிமா செய்திகள்
ஜெயிலர் பட போஸ்டர்.. கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்
- ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
- இப்படத்தின் பெயரை சில தினங்களுக்கும் முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினியின் 169-வது படத்திற்கு ஜெயிலர் என்ற பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிட்டதில் இருந்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் லேசான சலசலப்பு எழுந்து வருகிறது. முதல் போஸ்டர் வெளியிட்டதில் ரஜினியின் முகம் இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.
இதனை இணையத்தில் கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவரின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த ரஜினியிடம் சில ஊடகத்தினர் இதைக் கேள்வியாகவே கேட்டனர். அப்போதுதான் ரஜினிக்கே இந்த விஷயம் புரிந்திருக்கிறது. ஒரு நிமிடம் நின்றவர் காருக்குள் ஏறி அமர்ந்துவிட்டார்.
இந்த போஸ்டரை வெளியிட்ட பிறகு ரசிகர்கள் தாங்களாகவே ரஜினியின் முகம் இருக்கும்படியான போஸ்டர் டிசைனை வெளியிட்டிருக்கிறார்கள். விதவிதமான ரஜினியின் முகம் இந்த போஸ்டர்களை அலங்கரிக்கிறது. குறிப்பாக ஜெயிலர் போஸ்டரில் உள்ள குறையைச் சொல்லி நெல்சன் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கிறார்கள். ஒரு போஸ்டர் வெளியிடும்போது அதற்கு தனியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதையே படத்தின் பெயரோடு வெளியிடப்படும்.
ஆனால் எந்தவித புதிய போட்டோவும் இல்லாமல் இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பழைய தொழிற்சாலையின் பின்னணியில் ரத்தம் தோய்ந்த கத்தியை தொங்கவிட்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் இதை அப்படியே விட்டுவிடாமல் இந்தத் தொழிற்சாலையின் ஒரிஜினல் போட்டோவை தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அதையும் வெளியிட்டு இவ்வளவு அஜாக்கிரதையாகவா ரஜினி பட போஸ்டரை வெளியிடுவது என்று குமுறியிருக்கிறார்கள்.