search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் இளையராஜாவுடன் கைக்கோர்த்த ராமராஜன்
    X

    இளையராஜா- ராமராஜன்

    மீண்டும் இளையராஜாவுடன் கைக்கோர்த்த ராமராஜன்

    • நடிகர் ராமராஜன் தற்போது ‘சாமானியன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இதைத்தொடர்ந்து இவரின் 46-வது படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் குமார் இயக்குகிறார்.

    தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ராமராஜன் 'சாமானியன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ராகேஷ் இயக்குகிறார். இந்த படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


    அந்த வகையில் 7 ஆத்ரி பிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கிறார். ராமராஜனின் 46-வது படமான இந்த படத்தை 'சாமானியன்' படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் இயக்குவதோடு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் மூலம் கார்த்திக் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'சாமானியன்' படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் வி.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். 'சாமானியன்' படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இளையராஜா இசையமைக்கிறார்.


    இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் குமார் கூறியதாவது, ராமராஜன் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதனால் அவர் அதற்கான சரியான கதையை தேடியபோது, நான் எழுதியிருந்த 'சாமானியன்' கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் 'சாமானியன்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    அந்த படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ண தயாராகி விட்டேன். உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார். அப்போது நான் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருடமாக 'சாமானியன்' படத்தில் கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குனர் போன்றே அவருடன் இணைந்து பயணித்து வந்துள்ளேன். அதனால் இந்த படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்த படத்தின் மூலம் நான் இயக்குனராகவும் மாறி உள்ளேன்.


    'சாமானியன்' படத்தின் கதை என் வாழ்க்கையில் 2018-ல் நான் சந்தித்த வலியை மையப்படுத்தி உருவானது. அந்த படத்திற்கு ராமராஜன் பொருத்தமாக இருந்தார். ஆனால் இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான் இந்த கதையும். ஆனால் 'சாமானியன்' படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டும் வெவ்வேறாக இருக்கும்.

    இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளதுடன் நானே இயக்கத்தையும் கவனிப்பதால், வசனங்களை எழுதும் பொறுப்பை மதன் கார்க்கியிடம் கொடுக்கலாம் என பேசி வருகிறோம். அது உறுதியாகி, முழுமையான வசனங்கள் தயாரானதும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.


    இதற்கு முன்னதாக இந்த படத்தை பூஜையுடன் துவங்கி டீசருக்கான பணிகளை செய்து வருகிறோம். இந்த டீசரை முடித்துவிட்டு இசைஞானி இளையராஜாவை சந்தித்து போட்டு காட்ட இருக்கிறோம். அதன்பிறகு இந்த படத்தில் டைட்டில், முதல் தோற்ற போஸ்டர், டீசர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×