search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெந்து தணிந்தது காடு படம் வெளியாக தடை இல்லை
    X

    வெந்து தணிந்தது காடு - சிம்பு

    'வெந்து தணிந்தது காடு' படம் வெளியாக தடை இல்லை

    • கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் தடை இல்லை என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக மாற்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    வெந்து தணிந்தது காடு

    இப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆலியின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் 2018-ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படத்தை இயக்குவதற்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு முன்பணமாக ரூ.2 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது எங்களிடம் கூறிய அதே கதையை 'வெந்து தணிந்தது காடு' என்ற பெயரில் படமாக எடுத்து அதை நாளை வெளியிட இருப்பதாகவும் தங்களுக்கு தரவேண்டிய ரூ.2 கோடியே 40 லட்சம் பணத்தை தராமல் இந்த படத்தை வெளியிடக்கூடாது படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

    வெந்து தணிந்தது காடு

    இந்த மனுவானது நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்ட இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

    அதேசமயம் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது உண்மைதான் என்றும் அடுத்த படத்தை இயக்கும் முன்பாக மனுதாரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாகவும், இது சம்மதமாக மனுதாரருடன் சமரசம் செய்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

    வெந்து தணிந்தது காடு

    இந்த சமரசம் செய்துக் கொள்வதற்கு மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பான உத்தரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி கவுதம் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். தற்போதைக்கு இந்த படத்துக்கு தடை ஏதும் விதிக்கப்படாத காரணத்தினால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று தெளிவாகிறது.

    Next Story
    ×