என் மலர்
சினிமா செய்திகள்
படையப்பா உடன் இணையும் கட்டப்பா
- 1986-ல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் பாரத்' படம் பெரும் வரவேற்பை பெற்றது.
- ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா...’ என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த கூலி படத்தின் டீசரில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்று இருந்த 'வா வா பக்கம் வா' என்ற பாடலின் இசை இடம்பெற்று இருந்தது. 'தங்கமகன்' படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜாதான் இசையமைத்து இருந்தார். இதனையடுத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த இசையை கூலி டீசரில் பயன்படுத்தி இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
கூலி டீசரில் இடம்பெற்று இருக்கும் 'வா வா பக்கம் வா' என்ற பாடலின் இசையை பயன்படுத்த உரிய அனுமதி வாங்கவேண்டும். அப்படி வாங்கவில்லை என்றால் அந்த டீசரில் இருந்து அந்த இசையை நீக்கவேண்டும். அப்படி எதுவும் செய்யாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் அந்த நோட்டிசில் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் சத்யராஜ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியுடன் சத்யராஜ் நடிப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவில்லை என்றும் ரஜினிகாந்தின் நண்பராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, 1986-ல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் பாரத்' படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி.சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த்- சத்யராஜ் கூட்டணி இப்படத்திற்கு பலத்தை கொடுத்தது. 'என்னம்மா கண்ணு சௌக்கியமா...' என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.