search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: பாக். கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு
    X

    இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: பாக். கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு

    • சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
    • பாபர் ஆசமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

    இஸ்லாமாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடி அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

    சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

    அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கேப்டன்ஷிப் தனது பேட்டிங்கை பாதிக்கவில்லை என்று பாபர் ஆசம் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனேயே பாபர் ஆசம் மற்றும் பயிற்சியாளர் சக்லைன் லாகூருக்கு சென்றனர்.

    அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் முகமது வாசிமும் பங்கேற்றார். 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கேப்டன் பதவி, பயிற்சியாளர் பங்கு, அணியின் ஒவ்வொரு அம்சமும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    பாபர் ஆசம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதே சிறந்தது என்றும், டெஸ்ட் கேப்டன் பதவியை ஷான் மசூத் அல்லது முகமது ரிஸ்வானுக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுவதாகவும், டெஸ்ட் கேப்டனாக பாபர் ஆசமின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது என்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே வேளையில் பாபர் ஆசம் வருகிற ஜூலை மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து, ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு விளையாட்டை வழிநடத்த நஜாம் சேத்தி தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.

    Next Story
    ×