search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சேப்பாக்கத்தில் நாளை கோலாகலம்: பிளே ஆப் சுற்று வாய்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் நீடிக்குமா?
    X

    சேப்பாக்கத்தில் நாளை கோலாகலம்: 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் நீடிக்குமா?

    • லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
    • ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டு மானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ரன் ரேட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

    சி.எஸ்.கே. அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6 ஆட்டத்தில் 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது.

    வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி (மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 4 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட் , குஜராத் 35 ரன்) தோற்றது.



    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை நாளை (12-ந் தேதி) சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டமாகும். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் மற்றொரு கோலாகலத்துக்கு தயாராகிவிட்டனர்.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. வெற்றி பெற்றால் தான் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் மிகவும் வலுவாக இருக்கிறது. இதனால் அந்த அணியை வீழ்த்துவது சென்னை அணிக்கு சவாலானதே. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆதரவுடன் ஆடுவது மட்டுமே சி.எஸ்.கே.வுக்கு கூடுதல் பலமாகும்.

    குஜராத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடியது. பதிரனா, முஸ்டாபிசுர் ரகுமான் இல்லாதது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டியது.


    வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப் படுத்தினால் மட்டுமே ராஜஸ்தானை வீழ்த்த முடியும்.

    டோனி கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் அவரது பேட்டிங்கை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சி.எஸ்.கே.வை வீழ்த்தி 9-வது வெற்றியுடன் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லர் ரியான் பராக், யசுவேந்திர சாஹல், அஸ்வின் போல்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 29-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 28 போட்டியில் சென்னை 15-ல், ராஜஸ்தான் 13-ல் வெற்ற பெற்றுள்ளன.

    Next Story
    ×