search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருக்கழுக்குன்றம் (ருத்ரகோடித்தலம்) தோன்றியது எப்படி?
    X

    திருக்கழுக்குன்றம் (ருத்ரகோடித்தலம்) தோன்றியது எப்படி?

    • பல புவனங்களையும் துன்புறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமான் தம் மேனியினின்று ருத்திர கோடியரைத் தோற்றுவித்தார்.
    • அவர்கள் சிவபெருமான் தோற்றத்துடன் விளங்கினர்.

    ஆதியில் பரமசிவனாரிடம் இருந்து தோன்றிய வேதங்கள் கயிலாய மலையை அடைந்து தாங்கள் தேவர்கள் பிரம்மன் மற்றும் முனிவர்கள் பலரால் பலவாறு துன்பப்பட்டு வருந்துவதாகவும் பூவுலகில் தாங்கள் தங்கள் ஆறங்கங்களோடு மலையாக இருக்கவும் அம்மலையின் கொழுந்துபோன்று ஈசனே எழுந்தருளும்படியும் வேண்டித் துதித்தன.

    அவ்வாறே பரமசிவம் அருள்புரிய வேதங்கள் தங்கள் சகல பிரிவுகளுடன் மலையாயின.

    அம்மலையின் உச்சியில் சிவபெருமான் மலைக் கொழுந்தாய் எழுந்தருளினார். அந்த இடமே திருக்கழுக்குன்றம் ஆகும்.

    ருத்திர கோடியர் வரலாறு

    பல புவனங்களையும் துன்புறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமான் தம் மேனியினின்று ருத்திர கோடியரைத் தோற்றுவித்தார்.

    அவர்கள் சிவபெருமான் தோற்றத்துடன் விளங்கினர். அவர்கள் சிவபெருமான் கட்டளையிட்டருளியபடி அரக்கர்களை அழித்து அண்டங்களைக் காத்து வந்தனர்.

    திருமால் தேவர்களுக்குப் பாற்கடலைக் கடைந்து அமுதம் தருதற்கு மத்தாக மந்திரகிரியைப் பெயர்த்தனர்.

    பெயர்த்த பாதாளத்திலிருந்து பலமுகம் பல வடிவங்களுடன் அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் எங்கும் பரவி யாவரையும் துன்புறுத்தினர்.

    தேவர்கள் அஞ்சி சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் ருத்திரகோடியரை அழைத்து அரக்கர்களைக் கொன்று ஒழிக்குமாறு கட்டளையிட்டருளினார்.

    ருத்திர கோடியர் சிவபெருமானைப் பணிந்து 'பெருமானே! இவர்கள் இப்பிறப்பில் அரக்கர்களாயினும் முற்பிறவியில் பெருந்தவம் செய்தவர்கள்.

    இவர்களைக் கொல்வதால் உண்டாகும் பாவத்திற்கு அஞ்சுகிறோம்' என்றார்.

    பரமசிவனார் 'இவர்களை கொல்லும் பாவம் வேதகிரியைப் பூசித்தால் நீங்கும்' என்றருளிச் செய்தார்.

    உருத்திர கோடியர் அரக்கர்களை அழித்து வேதகிரித் தலமான திருக்கழுக்குன்றத்தை நாடிவந்தனர்.

    பரமசிவம் அவர்கள் முன் கோடி சிவலிங்கங்களாக இருந்தனர். உருத்திர கோடியர் மகிழ்ந்து வணங்கி நன்னீராலும் மலர்களாலும் பூசித்தார்கள்.

    பரமசிவனார் ரிஷபம் மீது பார்வதி தேவியாருடன் காட்சி தந்தனர்.

    உருத்திரகோடியர் இறைவனை வணங்கி 'இறைவா! இந்த மலையும் தலமும் எங்கள் பெயருடன் விளங்க அருள்செய்ய வேண்டும்' என்றனர்.

    சிவபெருமான் 'இந்த வேதகிரி உருத்திரகோடிகிரி என்றும் இத்தலம் உருத்திர கோடித்தலம் என்றும் எம் பெயர் உருத்திரகோட்டீசுவரர் என்றும் பார்வதி தேவியாரின் பெயர் பெண்ணினல்லாள் எனும் உருத்திர கோட்டீசுவரி என்றும் தீர்த்தம் உருத்திர கோடி தீர்த்தம் என்றும் வழங்கப்பெறும்' என்றருளினார்.

    அவர்கள் பாவம் நீங்கித் தம்பதம் எய்தினர். அன்றுமுதல் திருக்கழுக்குன்றம் பகுதிக்கு ருத்திரகோடித்தலம் எனும் பெயருண்டாகிறது.

    Next Story
    ×