என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    Kuligai Time in Tamil: குளிகை நல்ல நேரமா?: செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...
    X

    Kuligai Time in Tamil: குளிகை நல்ல நேரமா?: செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...

    • குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்பது ஐதீகம்.
    • சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும், அசுப காரியங்களை செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது.

    சுப காரியம் எதுவானாலும், அதைச் செய்வதற்கு பொருத்தமான நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது உலக வழக்கம். ராகு காலம், எம கண்டம் ஆகிய நேரங்களில் யாரும் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். ஆனால், பலரும் குளிகை காலத்தை தேர்வு செய்து சில முக்கியமான விஷயங்களை செய்து வருவது நடைமுறையில் உள்ளது. காரணம், குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்பது ஐதீகமாகவும், பொதுவான நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது.

    குளிகை காலம் என்ற வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்வது, கடனைத் திருப்பிக் கொடுப்பது, தங்க நகைகள் வாங்குவது, பிறந்த நாளைக் கொண்டாடுவது போன்ற விஷயங்களை செய்யலாம். அதன் காரணமாக தடைகள் எதுவும் இல்லாமல் அந்த விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் என்பது மட்டுமல்லாமல், அவை போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்வதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்பதும் மக்களின் மத்தியில் அதிக நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதனால் சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும், அசுப காரியங்களை செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது. அதன் காரணமாக, அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்வது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

    குளிகை காலம் உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான நிகழ்வை இங்கே பார்க்கலாம்...

    ராவணனின் மனைவியான மண்டோதரி, நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவளுக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்று அறிந்த ராவணன், குல குரு சுக்ராச்சாரியாரைச் சந்தித்தான். "குருவே..எனக்கு பிறக்கப் போகும் குழந்தை, பல வித்தைகளுக்கு தலைவனாகவும், எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாகவும், அழகில் சிறந்தவனாகவும் விளங்க எந்த நேரத்தில் பிறந்தால் நல்லது என்று சொல்லுங்கள்.." என்று கேட்டான். அதற்கு "கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் பிள்ளை பிறந்தால், அந்த குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்.." என்று சுக்ராச்சாரியார் யோசனை தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில், ராவணன் மேற்கண்ட யோசனையைச் சொன்ன சுக்ரன் உட்பட அனைத்து நவக்கிரக அதிபதிகளையும் சிறைபிடித்து, ஒரே அறையில் அடைத்து வைத்தான். ஒரே இடத்தில் கிரக அதிபதிகள் அனைவரும் இருப்பதால், மண்டோதரிக்கு பிரசவ வலி இருந்தபோதிலும் குழந்தை பிறப்பதற்கான சூழல் ஏற்படவில்லை.

    "இந்தச் சிக்கலை தீர்க்க வேண்டுமானால், நம் ஒன்பது பேர்களைத் தவிர, நல்ல காரியத்தை விருத்தி செய்வதற்காக ஒரு புதிய உபக்கிரக அதிபதியாக ஒருவனை சிருஷ்டி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுக்க வேண்டும். அதனால், நமக்கு நன்மை ஏற்படுவதுடன், அவனை சிருஷ்டிக்கும் அதே சமயத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவமும் ஏற்படும்" என்று சுக்ராச்சாரியார் தெரிவித்தார்.

    உடனே சனீஸ்வரன் தனது சக்தி அம்சம் மூலம், தன் மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்கிறார். அவரே குளிகன். அவர் பிறந்த அதே நேரத்தில், மண்டோதரியும் அழகான ஒரு மகனை பெற்றெடுக்கிறாள். அவன்தான் மேகநாதன். குளிகன் பிறக்கும்போதே நல்ல காரியங்களை நடத்தி வைக்கும் தன்மை கொண்டவனாக இருந்ததால், நவக்கிரக அதிபதிகள் அனைவரும் அவனை வாழ்த்தினார்கள். தினமும் பகல் மற்றும் இரவு ஆகிய வேளைகளில் குளிகை நேரம் என்ற அளவில் ஒரு நாழிகை நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரம் 'காரிய விருத்தி வேளை' என்று அழைக்கப்படுகிறது.

    Next Story
    ×