search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    காசிக்கு இணையான ராகு-கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலம்
    X

    காசிக்கு இணையான ராகு-கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலம்

    • இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.
    • மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை.

    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ராகு-கேது நிவர்த்தி தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் நாகூர் நாகநாத சாமி கோவில் காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.

    ராகு கால நேரத்தில் இத்தலத்து மூலவர் பெருமான் நாகநாத சாமியையும், நாகவல்லி தாயாரையும் வணங்கி, ராகு பகவானுக்கும் அவரது தேவியருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ராகுபகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்புக்குரியதாக கூறப்படுகிறது.

    காசிக்கு இணையானதாக குறிப்பிடப்படும் இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, தர்ப்பணம் அளித்து, தானம் செய்தால் கயாவில் வழிபாடு செய்த பலனும், பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் என கூறப்படுகிறது. இங்கு கிருத்திகை நட்சத்திர தினத்தில் சாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    நாகூர் நாகநாத சாமி கோவில் இறைவன் நாகநாதர், நாகராஜனால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இத்தலம் ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள புன்னாகவனத்தின் கீழே நாகலோகம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு நாகர் லிங்கமும் அதைச்சுற்றி இரு நாகங்கள் இணைந்து சிவலிங்க பூஜை செய்வதைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட நாகர்கள் சிலைகளும் உள்ளன.

    நாகர் லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் சாற்றி வழிபட்டால் மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை. இக்கோவிலின் கன்னி பகுதியில் நாககன்னி, நாகவல்லி சமேதராக ராகு பகவான் காட்சியளிக்கிறார். கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என்ற ஜோதிட சாஸ்திரப்படி இத்தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தனது தேவியருடன் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புக்குரியது ஆகும்.

    நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூரில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள நாகூர் நாகநாதர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    Next Story
    ×