search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஏழரைச் சனியும் அஷ்டமச் சனியும் எல்லோரையும் பாதிக்குமா? பரிகாரம் என்ன?
    X

    ஏழரைச் சனியும் அஷ்டமச் சனியும் எல்லோரையும் பாதிக்குமா? பரிகாரம் என்ன?

    • எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள்.
    • உங்கள் மனசாட்சி தான் சனிபகவான்.

    3 சுற்று ஏழரை, அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார் ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனியாக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள்.

    லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரனுக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. மேலே கூறிய அமைப்புகள் இருந்தும் ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசாபுத்தி இருந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம், தடை தாமதம், பண விரயம், பண இழப்பு இருக்கும்.சிலர் தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள்.

    அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள் , தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிகச் சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். இந்த காலத்தில் தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கருத்து வேறுபாடு மிகுதியாகும். முதலாளிகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்கமாட்டார்கள்.

    மேலும் ராசிக்கு 3,6,11-ல் சனி வரும் போது பல புதிய எண்ணங்கள் உதயமாகும். பல புதிய தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். மிகக் குறுகிய காலத்தில் வாழ்வில் பார்க்க முடியாத பெரிய பணத்தை சம்பாதிக்கிறார்கள். ஏழரை, அஷ்டமச் சனி ஆரம்பித்தவுடன் வாழ்நாளில் மீள முடியாத இழப்பை சந்திக்க நேருகிறது. புதிய தொழில் முனைவோர்கள், புதியதாக பெரிய தொழில் முதலீடு செய்பவர்கள் சுய ஜாதக ஆலோசனைக்குப் பிறகே தொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

    அதாவது கோட்சார சனி சாதகமாக இருக்கும் காலங்களில் சம்பாதித்த பணத்தை கோட்சார சனி சாதகமற்ற இடங்களுக்கு வரும் காலங்களில் இழந்துவிடுகிறார்கள். சனிபகவான் கர்ம காரகர், ஆயுள் காரகர், ஒருவர் ஜாதகத்தில் ஜனனம் முதல் வாழ்நாள் இறுதி வரை சனி பகவானின் ஆதிக்கம் தான் தொடரும். சனிபகவான்-வாயு, காற்று .அதாவது பிராணன் (சுவாசம்), குரு பகவான் அங்கத்தில் மூக்கு என்றால் அதனுள் ஏற்படும் சுவாசக்காற்று சனி பகவானே.

    கால புருஷ 10, 11-ம் அதிபதி என்பதால் தொழில், உத்தியோகம் அதன் மூலமாக கிடைக்கக்கூடிய லாப நஷ்டங்களுக்கு இவர்தான் பிரதிநிதியானவர். நீதி வழங்கும் நீதிமானாவார். சனி பகவானை கணிப்பதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும். கொடுப்பதும் அதனை கெடுப்பதும் அவரே. கொடுக்கும் போது அளவில்லாமல் கொடுப்பார். அதேபோல கெடுக்கும் போது அனைத்தையும் உருவி விடுவார்.

    நன்மை செய்தால் நன்மையை பலனாகவும், தீமை செய்தால் தீமையை பலனாகவும் தருபவர். இதற்காக தான் "நன்மை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு கெடுதலை செய்யாமல் இருப்பது நல்லது" என்று சொல்வார்கள். யாரையும் எளிதாக ஏய்துவிடலாம் ஏமாற்றியும் விடலாம். ஆனால் இது சனி பகவானிடம் செல்லாது.

    பரிகாரம்

    ஒரு மனிதன் சனி பகவானால்தான் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருகிறார்கள். 'நம்ம கையில எதுவும் இல்லை' என்கிற சரணாகதி தத்துவமும் புரிகிறது. எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி பகவான் உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாக நேரும்.

    உங்கள் மனசாட்சி தான் சனிபகவான். சனி பகவான் தான் உங்கள் மனசாட்சி. பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவிகள் நல்ல பலன் தரும்.

    தொழிலாளிகள், வேலையாட்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள் சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் சிவ வழிபாடு அன்னதானம் செய்வது சிறப்பு.

    சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.

    தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

    தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தாக்கம் குறையும்.

    திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.

    சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடலாம்.

    Next Story
    ×