search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இன்று ஆஷாட நவராத்திரி தொடக்கம்: வராஹி தேவியை விரதம் இருந்து வழிபட்டால்...
    X

    இன்று ஆஷாட நவராத்திரி தொடக்கம்: வராஹி தேவியை விரதம் இருந்து வழிபட்டால்...

    • ஜாதகப்படி செவ்வாய் ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
    • வராஹியை வணங்குபவர்களுக்கு செய்வினையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

    ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களிலிருந்துத் தோன்றியவள்தான் ஸ்ரீ மகா வராஹி எனப்படும் அம்மன். சேனைகளுக்குத் தலைவியாக அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள் வராஹி முகத்துடன் இருப்பதால் வராஹி எனப்படுகிறாள்.

    பிராமி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா என்னும் சப்த மாதாக்களில் இவள் 6-வதாக பூஜிக்கப்படுபவள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண்புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப்பகுதிக்கு வராஹியே தேவதையாவாள்.

    ஆனி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரையில் உள்ள ஒன்பதுநாட்கள் வராஹி நவராத்திரி எனப்படுகிறது. இதை ஆஷாட நவராத்திரி என்றும் சொல்வார்கள். ஒரு காலத்தில் அம்பிகை வழிபாடு தாய் வழிபாடாக மிகவும் சீரும் சிறப்புடன் விளங்கியது. நவராத்திரி என்றால் புரட்டாசி நவராத்திரிதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் 12 மாதங்களிலும் அம்பிகையை நினைத்து 12 நவராத்திரிகள் கொண்டாடிய காலமும் உண்டு.

    இப்போது பிரதானமாக நான்கு நவராத்திரிகள் இருக்கின்றன. வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி. இதில் ஆஷாட நவராத்திரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.

    குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் திகழும் பஞ்சமி திதி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ வராஹி தேவியை உபாசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் விரதம் இருந்து ஸ்ரீ மகா வராஹிக்கு அபிஷேகம், அர்ச்சனை பூஜைகள் செய்யலாம். இதனால் சிறந்த பேச்சுத் திறன் கிடைக்கும். ஜாதகப்படி செவ்வாய் ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீமகாவராஹியை வணங்குபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதை ஓட்டியே வராஹிக் காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதம் இருந்து ஸ்ரீ மகா வராஹியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி,

    மஞ்சள் பட்டுத் துணி சாத்தி,

    பஞ்சம்யை நம,

    தண்டநாதாயை நம,

    சங்கேதாயை நம,

    சமயேஸ்வர்யை நம,

    சமய சங்கேதாயை நம,

    வராஹியை நம,

    போத்ரிண்யை நம,

    ரிவாயை நம,

    வார்த்தாள்யை நம,

    மகாசேனாயை நம,

    ஆக்ஞாசக்ரேஸ்வர்யை நம,

    அரிக்ன்யை நம என்னும் 12 மந்திரங்களை சொல்லி சிவப்பு புஷ்பத்தால் பூஜை செய்ய வேண்டும். தோல் உரிக்காத கருப்பு, உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வராஹியை நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை செய்பவர்களுக்கு அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் நோய் எதிரி மற்றும் அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

    தஞ்சை பெரிய கோவிலில் எப்போதும் ஆஷாட நவராத்திரி மிக விசேஷமாக கொண்டாடப்படும். இந்த நாளில் நவதானிய அலங்காரம், தேங்காய் பூ, சந்தனம், குங்கும அலங்காரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஒன்பது நாட்கள் விரதம் இருந்து தினமும் வீட்டில் பூஜை அறையில் கோலமிட்டு, விளக்கேற்றி, அன்னை வராஹியை வழிபட்டால் எப்பொழுதும் குறைவற்ற செல்வமும் தானிய விருத்தியும் ஏற்படும். மாணவ-மாணவிகள் வராஹி அம்மனை வழிபட சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

    Next Story
    ×