search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆருத்ரா தரிசனம்: விரதம் அனுஷ்டிக்கும் முறை
    X

    ஆருத்ரா தரிசனம்: விரதம் அனுஷ்டிக்கும் முறை

    • சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும்.
    • இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    திருவாதிரை அன்று, நடராஜ பெருமானுக்கு களி நைவேத்தியமாக படைக்கப்படும். 'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது முன்னோர் வாக்கு. இறைவனுக்கு களி படைப்பதற்கான கதை ஒன்றும் உள்ளது. முன் காலத்தில் சேந்தன் என்ற சிவபக்தர் இருந்தார். விறகு வெட்டி கிடைக்கும் சிறிய வருவாயில் வாழ்க்கை நடத்தி வந்தார். இருப்பினும் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகே, அவர் உணவருந்துவார். ஒரு நாள் கடும் மழை பெய்தது.

    அதனால் விறகுகள் ஈரமாகி விட்டன. அதனால் விறகுகளை விற்க முடியாமல் வருவாய் பாதிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் சேந்தன் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வருகை தந்தார். அவருக்கு எப்படி உணவளிப்பது என்று சேந்தன் கவலைகொண்டார். அவரது மனைவி, வீட்டில் அரிசி மாவும், சிறிது வெல்லமும் இருப்பதாகவும், அதைக் கொண்டு அடியாருக்கு களி செய்து கொடுக்கலாம் என்று கூறினார். அதன்படியே சிவனடியாருக்கு களியை உணவாக படைத்தனர்.

    அதை உண்ட சிவனடியார் மகிழ்வுடன் புறப்பட்டார். அதற்கு மறுநாள் திருவாதிரையாகும். நடராஜரை தரிசிக்க, சேந்தனும் அவரது மனைவியும் சிதம்பரம் சென்றனர். அங்கு சிவபெருமானின் வாய்ப் பகுதியில் களி உண்டதற்கான அடையாளமாக சிறிது களி ஒட்டிக்கொண்டிருந்தது. தன் வீட்டிற்கு வந்து களி சாப்பிட்டது ஈசன் என்று அறிந்ததும் சேந்தனும், அவரது மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதை அறிந்த ஊர் மக்களும், சேந்தனின் பக்திக்கு தலை வணங்கினர். அன்று முதல் திருவாதிரை அன்று இறைவனுக்கு நைவேத்தியமாக களி படைக்கும் வழக்கம் வந்தது.

    சிவபெருமான் பிறப்பும், இறப்பும் இல்லாதவராக போற்றப்படுகிறார். ஆனால் அவருக்குரிய நட்சத்திரமாக 'திருவாதிரை' இருக்கிறது. பகவத் கீதையில், 'மாதங்களில் நான் மார்கழி' என்று கூறும் கிருஷ்ணர், 'நட்சத்திரங்களில் நான் திருவாதிரையாக இருக்கிறேன்' என்கிறார். தெய்வங்களை வழிபடுவதற்கான மாதமாக கருதப்படும் இந்த மார்கழியில்தான், திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனமும் வருகிறது. இந்த ஆருத்ரா தரிசனம், நடராஜ பெருமானுக்கு உகந்த வழிபாட்டு தினமாகும். இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோவில், திருவாரூர் தியாகராஜ பெருமான் ஆலயங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணு, திடீரென்று "ஆகா.. அற்புதம்" என்று சத்தம் போட்டு கூறினார். அவர் அப்படி பரவசம் அடைந்ததற்கான காரணம் என்ன என்று, மகாவிஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்திருந்த மகாலட்சுமிக்கும், மகாவிஷ்ணுவை தாங்கியபடி இருந்த ஆதிசேஷனுக்கும் புரியவில்லை. அவர்கள் இருவரும், திருமாலின் பரவச நிலைக்கு என்ன காரணம் என்பதுபற்றி அவரிடமே கேட்டனர். அதற்கு மகாவிஷ்ணு, "திருவாதிரை நாளான இன்று, சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை ஞானக் கண்ணால் பார்த்தேன். அதுதான் என் பரவசத்திற்கு காரணம்" என்றார்.

    ஈசனின் ஆனந்தத் தாண்டவம் பற்றி திருமால் சொல்லச் செல்ல, ஆதிசேஷனின் உடல் சிலிர்த்தது. அவருக்கும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை காண வேண்டும் என்ற ஆவல் உருவானது. ஆதிசேஷனின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட மகாவிஷ்ணு, "ஆதிசேஷா.. உன் மனம் நினைப்பதை நான் அறிவேன். பூலோகத்தில் பிறந்து ஈசனை நினைத்து தவம் இருந்தால், உனக்கு அந்த ஆனந்தத் தாண்டவ தரிசனம் கிடைக்கும், போய் வா" என்று அருளினார்.

    அதன்படியே ஆதிசேஷன், பூமியில் பதஞ்சலி முனிவராக பிறந்தார். இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்பு தோற்றமும் கொண்டவராக, அவரது உருவம் இருந்தது. பலகாலம் பூமியில் தவம் இருந்ததன் பலனாக, பதஞ்சலி முனிவருக்கு சிதம்பரம் ஆலயத்தில் இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவருக்கு சிவபெருமான் தன்னுடைய ஆனந்தத் தாண்டவத்தைக் காட்டி அருளினார். அப்போது பதஞ்சலி முனிவர், "இறைவா.. இந்த திருக்காட்சியை பூலோக மக்களுக்கும் காட்டி, அவர்கள் முக்தியடைய வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினார். அதன்படியே, ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது.

    விரதம் இருக்கும் முறை

    ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக பிரித்துள்ளனர். அதில் ஆடி முதல் மார்கழி வரையான தட்சிணாயன புண்ணியகாலத்தின் கடைசி மாதமாக இருப்பது, மார்கழி. இந்த மாதம் தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும். அதாவது அவர்களின் பிரம்ம முகூர்த்த நேரம் என்றும் இந்த மாதத்தை சொல்வார்கள். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திர நாளில்தான், திருவாதிரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, சிவநாமம் உச்சரித்து உடல் முழுவதும் திருநீறு தரிக்க வேண்டும்.

    பின்னர் சிவாலயம் சென்று, நடராஜரையும், சிவகாமி அம்மனையும் வணங்க வேண்டும். காலையில் ஆலயத்தில் நடைபெறும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்து இறைவனுக்கு திருவாதிரை களி படைத்து, அதை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். பகலில் உணவருந்தக் கூடாது. அன்று முழுவதும் சிவபுராணம் எனப்படும் திருவாசக பாடல்கள், தேவாரம் போன்றவற்றை பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். இரவில் எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    திருவாதிரை விரதத்தை மார்கழி திருவாதிரையில் தான் அனைவரும் கடைப்பிடிப்பர். ஆனால் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்திலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு வருடம் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு, வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பெரும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×