search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அமிர்தாம்பிகை உடனாய ஆவுண்டீஸ்வரர் கோவில்- திருமழிசை
    X

    அமிர்தாம்பிகை உடனாய ஆவுண்டீஸ்வரர் கோவில்- திருமழிசை

    • இந்த ஆலயம் சுமார் 80 ஆண்டுகளாக எந்த வழிபாடும் இன்றி மண்மூடிக் கிடந்துள்ளது.
    • இத்தல இறைவனுக்கு ‘ஆவுண்டீஸ்வரர்’ என்று பெயர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே உள்ளது, நேமம் என்ற ஊர். இங்குள்ள அமிர்தாம்பிகை உடனாய ஆவுண்டீஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    மகம் மற்றும் பூரம் நட்சத்திரக் காரர்களுக்கு பரிகாரத் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

    இந்த ஆலயம் 11-ம் நூற்றாண்டில், சோழப் பேரரசின் அடையாளமாக விளங்கும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

    பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்த போன இந்த ஆலயம், சுமார் 80 ஆண்டுகளாக எந்த வழிபாடும் இன்றி மண்மூடிக் கிடந்துள்ளது.

    காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில், 1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் இந்த ஆலயத்தின் திருப்பணி நடைபெற்று, மீண்டும் வழிபாட்டிற்கு வந்தது.

    மணல் மூடிக்கிடந்த இந்த ஆலய சிவலிங்கத்தின் மேல், பசு ஒன்று தினமும் பால் சுரந்தது. இதனால் கோபம் கொண்ட உரிமையாளர், அந்த பசுவை சாட்டையால் அடிக்க, அந்த அடியை இத்தல இறைவன் வாங்கிக்கொண்டார். பசுவை காத்தருளியதால், இத்தல இறைவனுக்கு 'ஆவுண்டீஸ்வரர்' என்று பெயர்.

    ஒரு பிரளய காலம் முடிந்ததும், பிரம்மதேவன் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடங்கும் முன்பாக, இத்தலத்தின் மீது அமிர்தத்தை தெளித்ததாக தல வரலாறு சொல்கிறது. தேவர்களும் இத்தல அம்பிகை மீது அமிர்தம் தெளித்தனர். இதனாலேயே அம்பிகைக்கு 'அமிர்தாம்பிகை' என்ற திருநாமம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அமிர்தம் போன்ற இன்பமான வாழ்க்கையை வழங்குபவர் என்பதால், இத்தல இறைவிக்கு 'அமிர்தாம்பிகை' என்று பெயர்.

    திருமணத் தடை, குழந்தைபேறு இல்லாமை போன்ற வேண்டுதல்களுக்கு, இந்த ஆலயம் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் மனதார வேண்டிக்கொண்டு அர்ச்சனை செய்தால், கோரிக்கைகள் நிறைவேறும்.

    மனதிற்குப் பிடித்த வரன் வேண்டும் பெண்கள், இத்தல அம்பிகைக்கு வெள்ளிக்கிழமைகள் மற்றும் நவராத்திரி தினத்தில் வளையல் அர்ச்சனை செய்து வழிபட்டால், விரும்பியபடியே திருமணம் நடந்தேறும்.

    திருவள்ளூரில் இருந்து திருமழிசை செல்லும் சாலையில் நேமம் என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், திருமழிசையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

    Next Story
    ×