search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அமெரிக்காவில் அமைந்த இந்து ஆலயங்கள்
    X

    அமெரிக்காவில் அமைந்த இந்து ஆலயங்கள்

    • அமெரிக்காவில் இந்துசமய ஆலயங்கள் பல இருக்கின்றன.
    • குறிப்பிடத்தக்க சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்து ஆலயங்கள் பல இருக்கின்றன. அனைத்து சமயத்தவர்களுக்கும் வழிபாட்டிற்கான உரிமை அளிக்கும் வகையில் உலக நாடுகள் பலவும், அவரவர் சமய தலங்களைக் கட்டுவதற்காக இடத்தையும் ஒதுக்கிக் கொடுக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இந்துசமய ஆலயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    மகா வல்லப கணபதி

    அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், அமெரிக்காவில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோவில் என்ற சிறப்புக்குரியது. இது 'ஸ்ரீ மகா வல்லப கணபதி தேவஸ்தானம்' என்றும், 'கணேஷ் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1977-ம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இருப்பினும், பாரம்பரிய மற்றும் மத நிகழ்வுகளை நடத்துவதற்காக 1970-ல் திறக்கப்பட்டது. இது அமெரிக்காவின் மிகவும் பிரபலமான இந்துக் கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    லட்சுமிதேவி ஆலயம்

    அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான கலிபோர்னியாவின் எல்லையில் இருக்கிறது, ஆஷ்லாந்து. இங்கு புகழ்பெற்ற லட்சுமி தேவி ஆலயம் இருக்கிறது. 'ஸ்ரீ லட்சுமி கோவில்' என்று அழைக்கப்படும் இந்த ஆலயம், 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. 1980-ல் தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானம், இரண்டு ஆண்டுகளில் முடிவுற்று மக்களின் வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆலயம் தரையில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு கோவில் நிர்வாகம் சார்பில், தினசரி பூஜைகள், திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மேலும் சுலோக வகுப்புகள், இந்திய கலாசாரம், மொழி குறித்த வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தில் மகாலட்சுமி தவிர, கணபதி, வெங்கடேஸ்வரா, நடராஜர், சுப்பிரமணியர், ஹரிஹரபுத்ரா, கருடன், நவக்கிரக சன்னிதிகள் அமைந்திருக்கின்றன.

    வெங்கடேஸ்வரா கோவில்

    அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் என்ற இடத்தில் அமைந்த பிரமாண்டமாக ஆலயமாக, 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்' கருதப்படுகிறது. இந்த ஆலயம் தென்னிந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலை நினைவுபடுத்தும் வகையிலான கட்டிட வடிவமைப்பைக் கொண்டு திகழ்கிறது. 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம், அமெரிக்காவின் பழமையான இந்து ஆலயங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் விநாயகர், பார்வதி தேவி மற்றும் சிவன் சன்னிதிகள் இருந்தாலும், வெங்கடேஸ்வரர்தான் முக்கிய தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்த ஆலயம் தங்க ரதத்திற்கு பிரசித்திப்பெற்றது.

    சிவ- விஷ்ணு கோவில் (வாஷிங்டன்)

    அமெரிக்காவின் முக்கிய நகரமான வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள, சிவ- விஷ்ணு ஆலயம் இது. பல்லவர், விஜயநகர பேரரசு, கேரளா மற்றும் மாயன் கோவில்கள் ஆகிய கட்டிடக்கலையின் கூட்டுக் கலவையாக இந்த ஆலயத்தின் கட்டிட வடிவமைப்பு அமைந்திருக்கிறது. இவ்வாலயத்தில் விநாயகர், ராமர், கிருஷ்ணர், துர்க்கை, மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களைக் குறிப்பிடும் தெய்வங்களும் வழிபடப்படுகின்றன. இந்த ஆலயத்தின் முக்கிய தெய்வமாக சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

    வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

    திருப்பதி வெங்கடாஜலபதியை நினைவுபடுத்தும் வகையில், அமெரிக்காவின் மத்தியப் பகுதியான இல்லினொய்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம். இதனை 'பாலாஜி கோவில்' என்றும் அழைப்பார்கள். மகாவிஷ்ணுவை பிரதான தெய்வமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆலயம் இது. அமெரிக்காவில் உள்ள பழமையான இந்து ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்த இடம் இந்திய- அமெரிக்க குடும்பங்கள் பலவற்றால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் வெங்கடாஜலபதி தவிர, விநாயகர், சிவன், பார்வதி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    சிவ- விஷ்ணு கோவில் (கலிபோர்னியா)

    அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான கலிபோர்னியாவில் அமைந்துள்ள, சிவ- விஷ்ணு கோவில் இது. பெரிய சிவப்பு மற்றும் வெள்ளை நிற கற்களால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம், பெரிய அளவில் வசீகரிக்கும் அழகைப் பெற்றுள்ளது. இந்து சமயத்தவரால் நன்கு அறியப்பட்ட சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவுக்காக கட்டப்பட்ட ஆலயம் இது. வெளிநாட்டினரை மயக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கட்டிடக்கலை பெருமைக்குரியது. இந்து சமூகம் மற்றும் கலாசார மையம் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு சமய மற்றும் கலாசார கல்வியை வழங்கும் வகுப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன.

    சிவ-விஷ்ணு கோவில் (புளோரிடா)

    அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, புளோரிடா. இங்கு சிவன் மற்றும் விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இதனை 'சிவ-விஷ்ணு கோவில்' என்று அழைக்கிறார்கள். 1990-ல் கட்டப்பட்ட இந்த ஆலயம், 6 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பரளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான கணபதி ஸ்தபதி வழிகாட்டுதலின்படி, மகாபலிபுரத்தைச் சேர்ந்த 12 கட்டிடக் கலைஞர்கள் உதவியுடன் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன.

    அட்லாண்டா ஆலயம்

    1980-களின் முற்பகுதியில் கட்டப்பட்ட அழகு வாய்ந்த ஆலயம் இதுவாகும். இந்திய பாரம்பரிய கட்டிடக்கலையின் உருவகமாக வெள்ளை நிறத்தில் இந்த ஆலயம் கண்களுக்கு விருந்துபடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் அட்லாண்டா பகுதியில் அமைந்திருக்கிறது, இந்த ஆலயம். இக்கோவிலில் விநாயகர், அனுமன், துர்க்கை, நாகேந்திரன் மற்றும் பைரவரை பின்பற்றுபவர்கள், வழிபாடு செய்கிறார்கள். இங்கு அமைந்துள்ள சிவன் மற்றும் விஷ்ணுவின் சன்னிதிகள் கோவிலின் சிறப்புகளின் ஒன்றாகும். வெங்கடேஸ்வரர் என்ற பெயரில் மகாவிஷ்ணுவும், ராமலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமானும் அருள்பாலித்து வருகிறார்கள்.

    Next Story
    ×