என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோவில்- திருப்பூர்
- தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
- வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோவில்களில் சக்தி வாய்ந்தது, காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோவில். கிஷ்கிந்தை ராஜ்யத்தில், சுக்ரீவனுக்கு மதியூகம் கொண்ட அமைச்சனாக, சொல்லின் செல்வனாக, உற்ற நண்பனாக விளங்கிய அனுமன், ராமரை தரிசனம் பெற்ற பின்னர் ஆஞ்சநேயராகப் பெயர்கொண்டு, சிரஞ்சீவியாகி, இன்றும், அனைவராலும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.
வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர். விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் இணைக்கும் பிரமாண்ட வடிவம் எடுத்துத் தன் ஆற்றலை நிரூபித்தவர். கொடிய அசுரர்களையும், தீவினை புரிவோரையும் எளிதாக அழிக்கக்கூடிய பலம் பொருந்தியவர் என்றாலும், முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் போற்றும் வகையில் பணிவையும், எளிமையையும் கைக்கொண்டவர்.
கொங்குவள நாட்டில் விராட மன்னர் ஆட்சி புரிந்த தலம் தாராபுரம். புராண வரலாற்றில் இடம் பெற்ற ஊர். பஞ்சபாண்டவர் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடித்தபின் ஒரு வருடம் அஞ்ஞானவாசம் மேற்கொண்டபோது யாருக்கும் தெரியாமல் மாறுவேடம் பூண்டு வாழ்வதற்காக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்தான் விராட நகர் என்ற இன்றைய தாராபுரம்.
தாராபுரம் நகரானது வளமையான வயல்களால் சூழப்பட்டதாகும். வான் உயர்ந்து வளர்ந்த கனி மரங்களையும் தன்னகத்தே கொண்டது. சோலைகளும், நந்தவனங்களும் சூழ்ந்திருக்க வற்றாத ஜீவநதியான அமராவதி ஆறு இங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. தாங்கள் புனைவேடம் பூண்டிருந்த காலத்தில் தங்களது உடைமைகளையும், ஆயுதங்களையும் தில்லாபுரியம்மன் ஆலயத்தில் ஒளித்து வைத்திருந்தார்கள் பஞ்ச பாண்டவர்கள்.
இத்தகைய புராண பிரசித்தி பெற்ற இடத்தில்தான் மாத்வ சம்பிரதாயத்தில் வந்த ஸ்ரீவியாசராஜர் எனும் மகான் இத்தலத்தில் அனுமனை பிரதிஷ்டை செய்ய விரும்பி அவ்வாறே செய்தார். பாரத தேசம் முழுவதும் 732 இடங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்த அவர் தாராபுரத்தையும் அவற்றில் ஒன்றாகத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், இத்தலத்தின் பெருமையை எளிதாக உணரலாம். அந்தவகையில் 89வது மூர்த்தமாக விளங்குகிறார் இந்த அனுமந்தசுவாமி.
இது அடர்ந்த காட்டுப் பகுதியாக விளங்கியதால் 'காடு' என்ற அடைமொழியுடன், இந்த ஆஞ்சநேயர் 'காடு ஹனுமந்தராயன்' என்று போற்றப்பட்டார். 1810ல் கோவை கலெக்டராக விளங்கிய டீலன் துரை தாராபுரத்தில் முகாம் அமைத்திருந்தபோது அவருக்கு ராஜபிளவை என்ற கடுமையான நோய் ஏற்பட்டது. அப்பொழுது அவரைச் சுற்றியிருந்தவர்கள் இந்த ஆஞ்சநேயமூர்த்தியின் பராக்கிரமத்தை விளக்கிச் சொல்ல, அவர்களுடைய யோசனைப்படி அனுமந்தசுவாமியை அவர் தரிசனம் செய்ய, உடனே அந்த நோய் அவரை விட்டு விலகியது.
இந்த நன்றிக்கடனாக, அவர் சுவாமிக்குத் தன் சொந்தப் பொறுப்பில் கர்ப்பகிரகத்தை கட்டிக் கொடுத்தாராம். திருப்பதி வெங்கடாசலபதியை போன்று 7 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டு பிரமாண்டமாக விளங்குகிறார் அனுமந்தசுவாமி. இவரது இரண்டு பாதங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இடுப்பில் மணி சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இடுப்புப் பட்டையில் கத்தி செருகப்பட்டிருக்கிறது. வலது கை அபயம் காட்டி அருள்கிறது. இடது கையில் சௌகந்தி மலர் ஏந்தியிருக்கிறார். கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகள் அணிசெய்கின்றன.
திருமுகம் வடகிழக்கு திசை நோக்க, அருள்பாலிக்கிறார். கிரீடத்தின் பின்புறத்தில் பட்டா கத்தி ஒன்றும் உள்ளது. தலைக்கு அருகே வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன. ஆஞ்சநேயருக்கு அடுத்து இடது புற மண்டபத்தில் ராமர் சந்நதி உள்ளது. சீதாதேவி, ஆஞ்சநேயர் சகிதமாக ராமர் திருக்காட்சி நல்குகிறார். ராமருக்கு அர்ச்சனைகள் செய்தபின் அனுமனுக்குச் செய்யப்படுகிறது. இது ஆரம்ப காலம் தொட்டு நடைபெறும் இந்தக் கோவிலின் சம்பிரதாயமாகும்.
துங்கபத்ரா நதிக்கரையில் மந்த்ராலயம் என்கிற தலத்தின் மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகையை (புனித மண்) கொண்டு வந்து இந்த ராமர் சந்நதியை அமைத்திருக்கிறார்கள். அரச மரம் சுமார் 250 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. நரசிம்ம தீர்த்த குளமும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. நவகிரக தோஷங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆஞ்சநேயரும், கணபதியும்தான் என்று சாஸ்திரங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
நெய்தீபம், வெண்ணெய், வடை மாலை ஆகியவற்றைப் படைத்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் நவகிரக தோஷம் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பது ஆயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. ஆஞ்சநேயரின் திருவடிகளை உளமாற துதித்து வணங்கிவந்தால், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கியே செல்லும். தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண். 0458 220749.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்