search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    வரங்களை அள்ளித்தரும் கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன்
    X

    வரங்களை அள்ளித்தரும் கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன்

    • தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    சர்வதேச சுற்றுலா தலமாகவும், கோடை வாசஸ்தலமாகவும் விளங்கும் கொடைக்கானலில், ஆனந்தகிரி முதல் தெருவில் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கொடைக்கானல் மலைப்பகுதி பக்தர்கள் மட்டுமின்றி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவோரும் அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். வரங்களை அள்ளிதரும் கொடை வள்ளலாக கொடைக்கானல் மாரியம்மன் இருக்கிறார்.

    இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதுதவிர தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சுமார் 15 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கொடைக்கானல் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள மலைக்கிராம மக்கள், தேனி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பங்கேற்பார்கள். திருவிழாவின்போது அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சிகள், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த திருவிழாவில் முதல் நாளில் போலீசார் சார்பில் முதல் மண்டகப்படி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி ஒன்றாக கொண்டாடும் திருவிழாவாகவும் இது உள்ளது.

    இதற்கிடையே கோவிலில் கடந்த 1978-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 1996-ம் ஆண்டும், மீண்டும் கடந்த 2010-ம் ஆண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆகமவிதிப்படி கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    இந்தநிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    Next Story
    ×