search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கயிலாயமும்.. அதன் சில பகுதிகளும்..
    X

    கயிலாயமும்.. அதன் சில பகுதிகளும்..

    • உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகவும் இந்த மானசரோவர் ஏரி கருதப்படுகிறது.
    • இமயமலையின் மீது 6,520 அடி உயரத்தில் ‘கவுரி குண்டம்’ என்ற ஏரி இருக்கிறது.

    சிவபெருமானின் வசிப்பிடமாக கருதப்படுவது, கயிலாய மலை. இமயமலைத் தொடரில் இந்த மலை அமைந்திருக்கிறது. சீனாவின் ஒரு பகுதியாகத் திகழும் திபெத்தில் இருக்கும் இந்த மலை, சுமார் 6,638 மீட்டர் (21 ஆயிரத்து 779 அடி) உயரம் கொண்டது. இந்த மலையில் இருந்து தான் சிந்து, சட்லெஜ், சுக்ரா, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. கயிலாய மலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த பயணத்தில் கயிலை மலையைச் சுற்றிலும் ஏராளமான தெய்வீகத் தன்மை கொண்ட இடங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே...

    கயிலாய மலை

    சிவபெருமான் வசிக்கும் இடமாகவும், சொர்க்கத்திற்கு இணையான பூலோக பகுதியாகவும் இதனை பக்தர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து, மரியாதையுடன் வழிபட்டுச் செல்லும் புனிதமான இடங்களில் இதற்கே முதலிடம். இந்த மலைதான், இந்து சமயத்தின் ஆன்மிகத்தை வரையறுப்பதாக அமைந்திருக்கிறது.



    மானசரோவர் ஏரி

    திபெத்தின் புனிதமான ஏரி இது. அதுமட்டுமல்ல உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகவும் இந்த மானசரோவர் ஏரி கருதப்படுகிறது. திபெத்தின் 'ங்காரி' மாகாணத்தில் அமைந்த இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 4,590 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. வட்ட வடிவில் அமைந்த மானசரோவர் ஏரியின் சுற்றளவு 88 கிலோமீட்டர் ஆகும். இந்த ஏரியை வலம் வரும்போது, சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களில் கயிலை மலையின் பிம்பத்தை காணலாம்.

    எம துவாரம்

    எமதர்மராஜனின் கதவு என்று பொருள் கொண்ட இந்த இடம், கயிலாய மலை- மானசரோவர் ஏரி பயணப் பாதையில் முக்கியமான ஒரு இடமாகும். கயிலாய மலையை சுற்றி வலம் வரத் தொடங்குவதற்கு முன்பு, இந்த கதவின் வழியாகச் சென்று வர வேண்டும். இந்த வாசலைக் கடந்து செல்பவர், தன்னைச் சுற்றியுள்ள எதிா்மறை சக்திகளில் இருந்தும், முன்ஜென்ம பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக நம்பிக்கை. எமதா்மன் இந்த கதவை, தனிப்பட்ட முறையில் காவல் காப்பதாக சொல்லப்படுகிறது. எதிர்மறையான சிந்தனை கொண்ட ஒருவரால், இந்தக் கதவை கடந்து செல்வது கடினம் என்கிறாா்கள்.

    பசுபதிநாதர் கோவில்

    காத்மாண்டுவில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இந்த ஆலயம். சிவ பெருமானுக்காக அமைந்த இந்தக் கோவில், தியோபட்டன் நகரின் மையத்தில், பாக்மதி ஆற்றின் கரையில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது. கயிலையில் வசித்த சிவன், சில காலம் வந்து தங்கியிருந்த இடமாக இந்த இடம் பார்க்கப்படுகிறது. மான் உருவத்தில் இருந்த ஈசனின் கொம்பை திருமால் தொட்ட போது, அவை உடைந்து சிதறின. அந்த துண்டுகளை சிவலிங்கமாக இங்கே விஷ்ணு பிரதிஷ்டை செய்ததாக வரலாறு.

    கவுரி குண்டம்

    இமயமலையின் மீது 6,520 அடி உயரத்தில் 'கவுரி குண்டம்' என்ற ஏரி இருக்கிறது. கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த இடமும், புனித யாத்திரை தலத்தில் ஒன்று. இங்கு வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன. பார்வதி தேவி இந்த குண்டத்தில் குளித்தபிறகே சிவபெருமானை மணந்ததாக நம்பிக்கை நிலவுகிறது. இங்கிருந்து 13 கிலோமீட்டரில் கேதார்நாத் கோவில் இருக்கிறது. இந்த கவுரி குண்டம் நீர் நிலைக்கு, 'கருணை ஏரி' என்ற பெயரும் உள்ளது.

    Next Story
    ×