search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    நீங்கா புகழுடன் விளங்கும் நீடாமங்கலம்  சந்தானராமர் கோவில்
    X

    நீங்கா புகழுடன் விளங்கும் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில்

    • ஸ்ரீராமர் கோவில் என்பதால் இங்கு தேவியாருக்கு தனி கோவில் இல்லை.
    • புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவமும் நடைபெறுகிறது.

    குழந்தை இல்லா தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அருளும் வைணவ கோவில்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நீங்கா புகழுடன் விளங்குவது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவில்.

    மழலை செல்வம் இன்றி தவிப்பர்கள் கட்டாயம் வந்து செல்ல வேண்டிய முக்கிய தலமாக கருதப்படும் நீடாமங்கலம் சந்தானராமரை மனமுருகி வேண்டினால் நிச்சயம் மழலை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    புத்திர பாக்கியம்

    தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மர் கி.பி.1761-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சந்தானராமர் கோவில் காசிவிஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களையும், சத்திரம் ஒன்றையும் கட்டினார். நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலுக்கு மாலை அணிவித்தது போல் வெண்ணாறு, கோரையாறு ஆகிய ஆறுகள் கோவில் அருகே உள்ளன.

    நீடாமங்கலம் நகரில் மையப்பகுதியில் உள்ள இந்த கோவில் இறைவன், மன்னர் தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் அருளினார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் பாடல் பெற்ற இக்கோவிலின் எதிரில் தெப்பக்குளம் ஒன்றும் உள்ளது.

    கொடிமரம்

    கோவிலுக்கு உள்ளே சென்றால் அழகாக கட்டப்பட்ட முன் மண்டபம், அதற்கடுத்து மூன்று கண்களை உடைய கோபுர வாயில், உள்பிரகாரத்தின் கிழக்கில் கொடி மரம், தென்கிழக்கில் மடப்பள்ளி, வடகிழக்கில் யாகசாலை, மேற்கில் அகலமான சன்னதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர்(ராமானுஜர்) ஸ்ரீமந்நிகமாந்த தேசிகன் ஆகியோர்(விக்கிரகங்களும்) எழுந்தருளியிருக்கிறார்கள்.

    அதற்கு அருகில் வாகன மண்டபம், கச்சேரி மண்டபம் உள்ளது. கோவிலின் உள்ளே பெருமாள் சன்னதிக்கு முன்பு நடுவில் மகாமண்டபம் உள்ளது. அதற்கு தெற்கிலும், கிழக்கிலும் வாசல்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன

    அனுமன் சன்னதி

    இந்த மண்டபத்தில் கருடன், பெருமாளுக்கு நேர் எதிரிலும், அனுமார், சேனை ஆகியோர் சன்னதிகள் வடக்கிலும், தெற்கிலும் உள்ளன.

    தெற்கு நோக்கிய அனுமார் நினைத்ததை கொடுக்கக் கூடியவர் என்பது சிறப்பாகும். மூலஸ்தானத்தில் சந்தானராமசுவாமி, சீதை, லெட்சுமணர், அனுமார், சயன சந்தான கோபாலன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். விமானத்துக்கு வெளியில் தெற்கில் தும்பிக்கையாழ்வார், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் உள்ளனர். கோவிலுக்குள் 2 பிரகாரங்களும், வெளியில் தேரோடும் வீதியும் உள்ளது.

    கோவிலில் அனுமனுக்கு தனி சன்னதி உள்ளது. இதற்கு காரணம் சந்தானராமசுவாமி குழந்தை பாக்கியம் அருளுவதாலும், ராம பக்தர்களுக்கு அனுமானே குரு என்பதாலும் இங்கு அனுமன் பரமபாகவத அனுமான், தாச அனுமான், சத்குரு அனுமான் என்ற பாவத்தில் தனி சன்னதியில் உள்ளாா். ஸ்ரீராமர் சன்னதிக்கு செல்லும் முன்பு சத்குரு அனுமான் வணக்கத்துடன் செல்வது எந்த ராமர் கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

    தசரத மன்னன்

    நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் மூலவர், தசரத மன்னனுக்கு புதல்வராக தோன்றியதாலும், தஞ்சையை ஆட்சி புரிந்த பிரதாபசிம்மராஜாவுக்கு புத்திர பாக்கியம் கொடுத்த காரணத்தாலும் சந்தானராமசுவாமி என்ற பெயருடன் விளங்குகிறார். கோலவல்லி ராமன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. மகாராஜாவின் மனைவி யமுனாபாய் அம்மாள், வழிபட்டு பிரதிஷ்டை செய்தது ஸ்ரீராமர் கோவில் என்பதால் இங்கு தேவியாருக்கு தனி கோவில் இல்லை.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும் சிறப்பு வாய்ந்த திவ்யமூர்த்தி எழுந்தருளிய இந்த கோவில் பெருமையை மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை-பூவினுள் பதுமம் போலும், புருடருள் திருமால் போலும், காவினுள் கற்பம் போலும், கலைகளுள் ஞானம் போலும், ஆவினுள் சுரரான் போலும், அறத்துள் இல்லறம் போலும், நாவினுள் மெய்நா போலும், நாட்டினுள் சோழநாடு போலும் என்ற பெருமையுடைய வெண்ணாறு, கோரையாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் யமுனாம்பாள்புரம் என்கிற நீடாமங்கலத்தில் இக்கோவில் அமைந்துள்ளது என பாடியுள்ளாா்.

    நீராடுமங்கலம்

    இந்த பகுதியில் பறவை கூடுகள் அதிகம் இருந்ததாலும், நீராடுவதால் மங்களம் உண்டாகுவதாலும் நீராடுமங்கலம் என்ற பெயர் நீடாமங்கலமாயிற்று. மகாராணி யமுனாம்பாள் இவ்வூர் தோட்டத்தில் மா மரத்தில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். இன்று வரை அந்த இடம் புனிதமாக பாதுகாக்கப்பட்டு அம்மையாருக்கு தனி கோவில் அமைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தை மாத கடைசி வெள்ளியன்று யமுனாம்பாள் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. இந்திய தலைமை தேர்தல் முன்னாள் ஆணையர் கோபாலசுவாமி உதவியுடன் சந்தானராமர் கோவிலுக்கு திருப்பணிகள் நடந்து குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    சந்தானகோபால ஹோமம்

    மாதந்தோறும் ஆழ்வார் திருநட்சத்திரத்தில் சேவாகாலம் சாற்றுமுறை, தி்ருமஞ்சனம், புனர் பூச நட்சத்திரத்தில் திருமஞ்சனம், மூல நட்சத்திர வழிபாடு, சுவாதி நட்சத்திர வழிபாடு, சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை, ஆயில்யம் வழிபாடுகள், ரோகிணியில் அந்தந்த சன்னதிகளில் திருமஞ்சனம், ரோகிணி நட்சத்திரத்தில் புத்ர சந்தானகோபால ஹோமம் நடைபெறுகிறது. வியாழக்கிழமைகளில் சந்தானகோபால ஜெபம் செய்து சந்தானராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் அடையலாம் என்பது ஐதீகம்.

    கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள்

    இந்த கோவிலில் நாள்தோறும் காலை 6.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதம் அட்சய திருதியையன்று கருடசேவையும், வைகாசி விசாகத்தில் நம்மாழ்வார் திருமஞ்சனமும், ஆடி மாதத்தில் ஆடிப்பூர தெப்ப உற்சவமும், ஆவணிமாதம் பவித்ர உற்சவமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவமும் நடைபெறுகிறது.

    ஐப்பசி மாதத்தில் தீபாவளி உற்சவமும், கார்த்திகை மாதம் குடமுழுக்கு தினத்தில் 108 கலச திருமஞ்சனமும், திருக்கார்த்திகை உற்சவமும், மார்கழியில் தனுர் மாத பூஜைகளும், அனுமன் ஜெயந்தி, வைகுண்டஏகாதசி திருஅத்யயன உற்சவம் 20 நாட்கள் நடைபெறுகிறது. தைமாதம் சங்கராந்தி பொங்கல் விழா நடைபெறுகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்து அங்கிருந்து தஞ்சை செல்லும் பஸ்சில் நீடாமங்கலத்துக்கு வந்து சந்தானராமரை தரிசிக்கலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர் செல்லும் பஸ் அல்லது ரெயிலில் பயணித்து நீடாமங்கலத்தில் இறங்கி சந்தானராமரை தாிசிக்கலாம்.

    Next Story
    ×