search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    உறையூர் காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரசுவாமி திருக்கோவில்
    X

    உறையூர் காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரசுவாமி திருக்கோவில்

    • இங்கு வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் திருமுக்கீச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
    • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும்.

    தல வரலாறு

    சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அக்கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.

    தலபெருமை

    உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

    உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.

    சிறப்புக்கள்

    * நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தார். இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    * மூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.

    * இச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.

    * இச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.

    Next Story
    ×