என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
தீவினைகளை வேரறுக்கும் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில்
- இந்த கோவில் விநாயகர் சிலை உயரமானதாக கருதப்படுகிறது.
- விநாயகரின் பின்பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது.
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியின் மேற்கு நோக்கி சில கிலோ மீட்டர் சென்றால் பிள்ளையாருக்காக தோன்றிய ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் பிள்ளையார்பட்டி.
சோழர்களின் அழகிய ஆலயத்தோடு எழில்மிகு தோற்றத்துடன் அமைந்திருக்கிறது இங்குள்ள ஹரித்ரா விநாயகர் கோவில். பிள்ளையார்பட்டி கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகர் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவர். இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகரை மாமன்னன் ராஜராஜ சோழன் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.
தல வரலாறு
ராஜராஜ சோழன் தனது வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளையும், சிறப்புகளையும் பெற்றிருந்தார். அதனை உலகுக்கு எடுத்து காட்டும் விதமாக அதிசயங்களே அசந்து போகும் அளவுக்கு அமைக்கப்பட்ட அற்புதமான ஆலயம் பெருவுடையார் கோவில் எனப்படும் தஞ்சை பெரிய கோவில்.
பெரிய கோவிலை பிரதிஷ்டை செய்வதற்காக ராஜராஜ சோழன், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக் கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் சிலைகளை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.(காவிரியின் பிறப்பிடமாக இருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் இருந்து இந்த பிள்ளையாரை எடுத்து வந்ததாகவும் மற்றொரு கருத்து நிலவுகிறது.)
தேர் அச்சு முறிந்தது
அப்படி வரும் வழியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து தேர் நின்று விட்டது. அப்போது வீரர்கள் முறிந்த தேர் அச்சை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் தேர் அச்சை சரி செய்த பின்னும் தேர் அந்த இடத்தில் இருந்து நகன்று செல்லவில்லை.
இதனால் இந்த இடத்தில் தான் விநாயகர் கோவில் கொண்டு இருக்க விரும்புகிறார் என கருதிய ராஜராஜ சோழன், விநாயகர் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டாம் என முடிவு செய்து அச்சு முறிந்து தேர் நின்ற இடத்தில் விநாயகரை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார்.
பிள்ளையார்பட்டி
இதுவே பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில் ஆகும். இதனால் இந்த ஊர் பிள்ளையார்பட்டி என பெயர் பெற்றது. இந்த கோவிலில் உள்ள விநாயகரை வழிபட்டால் தீய வினைகள் அகலும் என்றும் கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பக்தா்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை.
மேலும் நோயற்ற வாழ்வை அளித்து ஆயுள் பலத்தை அளிக்கும் சக்தி இத்தலத்தில் உள்ள விநாயகருக்கு உண்டு என்பதால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல தவறுவது இல்லை.
சோழர் கால கட்டிட அமைப்பு
தற்போது உள்ள இந்த கோவில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சோழர் கால கட்டிட அமைப்பில் கோவில் அமைந்துள்ளது. 11 அடி உயரமும், 5 அடி அகலமும் உள்ள பிள்ளையாரை பீடத்தி்ல் அமர்த்தி அதன் மீது ஆலயத்தை கட்டியதாக கூறப்படுகிறது. அதற்கான அடையாளங்களும் உள்ளன.
இந்த கோவிலில் பெரிய பிள்ளையாரை தரிசிக்க மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவாசல் அமைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
கோவில் குடமுழுக்கு
பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு வருகிற 9-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலில் பிள்ளையார் மட்டுமின்றி அய்யப்பன், சிவன், நவக்கிரக சன்னதிகளும் அமைந்துள்ளன.
இந்த கோவிலில் சிவன், நவக்கிரகம், பைரவர் ஆகிய சன்னதிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும். இந்த கோவிலில் கார்த்திகை சோமவார வழிபாடு, பிரதோஷம், அஷ்டமி பூஜை, கிருத்திகை வழிபாடு ஆகியவை விமரிசையாக நடக்கும்.
கடன் நிவர்த்தி விநாயகர்
இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகர் பக்தர்களால் கடன் நிவர்த்தி விநாயகர் என அன்போடு அழைக்கப்படுகிறார். காரணம் இங்கு நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் தொடர்ந்து 8 முறை கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். தீராத கடன் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ராகு-கேது தோஷம், திருமண தடை நீங்கும். வினை தீர்ப்பான் விநாயகர் என்ற சொல்லுக்கு ஏற்ப பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை பெற்றவர் இக்கோவில் விநாயகர்.
சிறப்பு வழிபாடு
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் கார்த்திகை சோமவார வழிபாடு மிக விமர்சையாக நடைபெறும். மேலும் பிரதோஷ வழிபாடும் இக்கோவிலில் நடைபெறுவது தனி சிறப்பு. பிரதோஷ தினத்தன்று நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், திரவியப்பொடி, தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
அஷ்டமி பூஜை அன்று கால பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும். தற்போது இக்கோவிலில் புதிதாக அகஸ்தியர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமைதோறும் அகஸ்தியர் வழிபாடும் நடைபெறுகிறது.
தலவிருட்சம்
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம். கோவில் தலவிருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. இந்த மரம் சிவனின் நேர் எதிரில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
இந்த கோவிலில் அய்யனார், நாகலம்மன், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனி சன்னதியில் உள்ளனர். விநாயகரின் பின்பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. வயிற்றுப்பகுதியில் ராகு-கேது அமைந்திருப்பது இத்திருத்தல மகிமையை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. ஹரித்ரா விநாயகருக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் படையலிட்டு வழிபடுவது கூடுதல் சிறப்புகளை தரும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஹரித்ரா விநாயகர் மனம் உருகி வேண்டும் பக்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பதில் எள்ளளவும் அய்யம் வேண்டாம் என்பதே பக்தர்களின் கூற்றாகும்.
நந்தி வாகனத்தில் விநாயகர்
இந்த கோவில் விநாயகர் சிலை உயரமானதாக கருதப்படுகிறது. இந்த விநாயகர் அருமையான சிற்ப வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளார். இத்தகைய சிலை அமைப்புகளை காண்பது அரிது என கூறப்படுகிறது. வழக்கமாக கோவில் கட்டி பிரதிஷ்டை செய்வது வழக்கம். ஆனால் இந்த கோவில் பிரதிஷ்டை செய்து இதன் பிறகு கோவில் கட்டப்பட்டது தனி சிறப்பு ஆகும். இக்கோவிலில் பிள்ளையாருக்கு வாகனமும் மாறுகிறது. முன்பகுதியில் மூஷிக வாகனத்துக்கு பதில் நந்தியே எழுந்தருளியிருக்கிறார்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தஞ்சை புதிய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி பஸ் மூலம் சென்று வரலாம்.
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் அங்கிருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையாரை தரிசிக்கலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்