என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
சிக்கல்களை தீர்க்கும் 'சிங்காரவேலவர்'
- இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
- சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் எனும் ஊரில் ஸ்ரீவேல் நெடுங்கண்ணி அம்மன் சமேத ஸ்ரீநவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 83- வது தலமாகும். 72 மாடக்கோவில்களில் ஒன்று மேலும், மாமன்னன் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட 72 மாடக்கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்டுள்ளது.
இங்கு சிங்காரவேலவர் (முருகன்) தனி சன்னதியிலும், கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீகோலவாமன பெருமாள் தனிக்கோவில் கொண்டும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். இங்கு முருகப்பெருமான் அம்மை, அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அதனால், இங்கு சிங்காரவேலவர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார்.
தலவிருட்சம் குடமல்லிகை. தீர்த்தம் அமிர்த தடாகம் என்றழைக்கப்படும் க்ஷீரபுஷ்குரணி (பாற்குளம்).ஸ்ரீகோலவாமனப் பெருமாள் நீராடி இத்தல இறைவனை வழிபட்ட தீர்த்தம் கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம் ஆகும். இதுபோல் சைவமும் ,வைணவமும் இணைந்த கோவில்கள் தமிழகத்தில் சில மட்டுமே உள்ளன. இக்கோவிலை பற்றி திருஞானசம்பந்தர் "மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள்
மாமறையோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே" என தேவாரத்தில் பாடியுள்ளார். மேலும், இத்தல முருகனை பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் 2 பாடல்கள் பாடியுள்ளார்.
கோவிலின் தல வரலாறு
இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார். அதன்படியே இன்றைய சிங்காரவேலவர் கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு.
அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்ற நம்பிக்கையும் உள்ளது.
சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.
கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரமோற்சவ விழாவும், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை விழாவும் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். இக்கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறும். இங்கு வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியதும், வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
64 சக்தி பீடங்களில் ஒன்று
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிக்கல் சிங்காரவேலவர் கோவில் அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் அன்னை உமையவள் முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய சக்தி எனும் வேல் வழங்கியதால் வேல்நெடுங்கண்ணி எனும் சக்தியாயதாக்ஷியாக அருள்பாலிக்கிறாள். இங்கு மரகதலிங்கம் (மரகதவிடங்கர்) உள்ளது கூடுதல் சிறப்பாகும்.
தரிசன நேரம்: காலை 6 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும்.
கோவில் அமைவிடம்
இக்கோவிலுக்கு, வந்து தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினம் வந்தடைந்து, அங்கிருந்து நகர பஸ்களில் ஏறி 5 கி.மீ தூரம் உள்ள சிக்கல் என்ற ஊரில் இறங்கி கோவிலை வந்தடையலாம்.
அல்லது, திருவாரூர் வந்தடைந்து அங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சிக்கல் வந்து இறங்கி சாமி தரிசனம் செய்யலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்