என் மலர்
கோவில்கள்
சிவலோகநாதர் திருக்கோவில்- விழுப்புரம்
- விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ளது சிவலோகநாதர் திருக்கோவில்.
- இங்குள்ள இறைவன் சிவலோகநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள கிராமம் என்ற இடத்தில் இருக்கிறது, சிவலோகநாதர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்..
மூலவர்: சிவலோகநாதர், முண்டீச்சுரர், முடீசுரர்
அம்மன்: சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை
தலவிருட்சம்: வன்னி மரம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், முண்டக தீர்த்தம்
தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், 230-வது தலமாகவும், நடுநாட்டுத் தலங்களில் 19-வது தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
இங்குள்ள இறைவன் சிவலோகநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இவரை பிரம்மா மற்றும் இந்திரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
இத்தல சிவன் சன்னிதிக்கும், அம்மன் சன்னிதிக்கும் இடையில் முருகப்பெருமானின் சன்னிதி அமைந்து, 'சோமாஸ்கந்தர் அமைப்பு'டன் திகழ்கிறது.
வீரபாண்டியன் என்ற மன்னனுக்கு, இத்தல ஈசன் திருநீற்றுப்பை (பொக்களம்) அளித்துள்ளார். இதனால் சிவனுக்கு 'பொக்களம் கொடுத்த நாயனார்' என்ற பெயர் உண்டு.
இத்தல சுவாமிக்கும், அம்மனுக்கும், அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் சாத்தி வழிபடும் நேர்த்திக்கடன் இங்கே பிரசித்தம்.
கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் நுழைவு வாசல் அருகே இடம் மாறிய நிலையில் விநாயகரும், முருகனும் வீற்றிருக்கின்றனர். முருகனின் இடது கை, நவரச முத்திரையுடன் காணப்படுகிறது.
சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், மார்கழி மாத திருவெம்பாவை பாராயணம், திருவாதிரை, பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இந்த ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி, வழக்கம் போலவே கல்லால மரத்தின் அடியில் வீற்றிருந்து அருள்புரியாமல், ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்து அருள்புரியும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.
சிவபெருமானின் வாசல் காவலர்களான திண்டி, முண்டி இருவரும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். முண்டி வழிபாடு செய்ததால் இத்தலம் 'முண்டீச்சுரம்' என்றானது.
நடனத்திலும், இசையிலும் சிறந்து விளங்க நினைப்பவர்கள், இத்தல இறைவியை வழிபாடு செய்தால் சிறந்த இடத்தை அடையலாம் என்பது நம்பிக்கை.
விழுப்புரத்தில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, கிராமம் என்ற ஊர்.