என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
அனைத்து தோஷங்களையும் நீக்கும் திருமாளம் மகாகாளநாதர் கோவில்
- இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
- இங்கு மட்டும்தான் விநாயகரை மனித குழந்தை வடிவத்தில் பார்க்க முடியும்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.
இங்குள்ள இறைவன் மகாகாளநாதர் என்றும், இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்த பின்னர் அந்த மாலைகளில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மாகாள வாவி என்ற தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும் முருகப்பெருமானையும் வழிபட்டால் விரைவில் மக்கட்பேறு பெறலாம் என்பதும் காலம், காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
கோவில் அமைப்பு
இந்த கோவிலுக்கு நாம் சென்றவுடன் நம்மை வரவேற்பதுபோல அமைந்துள்ளது உயர்ந்த ராஜகோபுரம். கோபுரத்தை வழிபட்டு உள்ளே சென்றால் பெரிய முற்ற வெளி உள்ளது. இதன் வலது புறத்தில் கல்யாண மண்டபமாகிய அலங்கார மண்டபம் உள்ளது. அதற்கு எதிரில் இறைவன் சன்னதிக்கு எதிரில் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளது. வழிபட வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் வகையில் அமர்ந்துள்ளார் வார விநாயகர்.
அடுத்து இரண்டாவது கோபுரம். பெரும்பாலும் ராஜகோபுரத்தை விட மிகவும் சிறிய வடிவில் தான் இந்த கோபுரம் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் ஓரளவு பெரிய அளவில், அழகிய சிற்பங்களுடன் அழகாக உள்ளது. கர்ப்பக்கிரகத்தில், மூலவர் நாகநாத பெருமான், சிவலிங்க திருமேனியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். அவரது இடப்பக்கத்தில் அம்பாள் எழுந்தருளி இருக்கிறார்.
மூலவர் சன்னதிக்கு வடக்கு பக்கம் காட்சி கொடுத்த நாயகரும், நடராச பெருமானும், ஏனைய உற்சவர்களும், காட்சி தருகிறார்கள். மேலும், தியாகராஜப் பெருமான் சன்னதியில், நீலோத்பாலாம்பாளும், குழந்தை வடிவில் முருகப்பெருமானும், விநாயகரும் உள்ளனர். பெரும்பாலும் விநாயகப் பெருமானை பானை வயிற்றுடன், தும்பிக்கையுடனும் நாம் பார்த்து இருப்போம். ஆனால் இங்கு மட்டும்தான் விநாயகரை மனித குழந்தை வடிவத்தில் பார்க்க முடியும். அம்பாளின் பெயர் பயட்சயாம்பிகை(ராஜ மாதங்கி, அதாவது தன்னை வணங்குபவர்களின் பயத்தை எல்லாம் போக்குவதால் இந்த பெயர் ஏற்பட்டது.
திருமண தடை நீக்கும் தேவி
திருமாளத்தில் திருமண கோலத்தில் சிவனும், பார்வதி தேவியும் வீற்றிருந்தனர். அப்போது இறைவன், பார்வதி தேவியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்று கேட்டார். அதற்கு பரமேஸ்வரி, இப்போது நாம் திருமண கோலத்துடன் காட்சி தருகிறோம். நம்மை தரிசிக்க வரும் பக்தர்களில் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் பலர் வருவார்கள். அவர்கள் வரும்போது இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலை கட்டி வந்து, நமக்கு அணிவித்து அர்ச்சனை செய்த பின்னர், அவற்றில் ஒன்றை அவர்களது கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்க அருள் பாலிக்க வேண்டும் என்று கேட்டார்.
உனது விருப்பம் நிறைவேறுவதாக! என்று கூறி இறைவன் வரம் கொடுத்தார். இதனால்தான் இக்கோவிலுக்கு வரும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை வாங்கி வந்து அம்மனுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து பின்னர் ஒன்றை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது
தல வரலாறு
அம்பர் என்னும் ஊரில் அந்தணர் குளத்தில் அவதரித்தவர் சோமாசி மாறர் என்ற முனிவர். அவரது மனைவி சுசீலா தேவியார். இவருக்கு நீண்ட நாட்களாக சோமயாகம் நடத்த வேண்டும் என்று விருப்பம் இருந்து வந்தது. அந்த யாகத்தில் தியாகராஜப் பெருமானே நேரில் வந்து கலந்து கொள்வதோடு அவியை(தினைமாவு) பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார் ஆனால் திருவாரூரில் இருக்கும் தியாகராஜப்பெருமானை கோவிலுக்கு வரவழைப்பது என்பது மிகவும் சிரமம். அதில் இறைவனையே அவியை பெற்றுக்கொள்ள செய்வது சற்று சிரமமான விஷயம் என்று கருதினார்.
இருப்பினும் இறைவனை வரவழைத்தாக வேண்டும் என்று உறுதியோடு சோமாசி முனிவர் இருந்தார். அப்போது சுந்தரர் பெருமானை அணுகினால், தியாகராஜரை அழைத்து வருவார் என்று சிலர் கூறினர். இதற்கிடையே சுந்தரருக்கு இருமல் நோய் இருந்ததால் தூதுவளை கீரையை விரும்பி உண்டு வந்தார். இதனால் சோமாசி முனிவர் சுந்தரருக்கு தினமும் தூதுவளை கீரையை பறித்துக் கொடுத்து வந்தார்.
அதுவும் சுந்தரருக்கே தெரியாமல் அவருடைய மனைவி பறவை நாச்சியாரிடம் கொடுத்து வந்தார். இதற்கிடையே ஒரு நாள் பறவை நாச்சியாரிடம் சுந்தரர், தினமும் யார் கீரையை கொடுப்பது? அவரை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சோமாசி முனிவர் என்பவர் கொடுக்கிறார் என்று பறவை நாச்சியார் கூறியுள்ளார்.
சோமயாகம்
இதனையடுத்து, சுந்தரரை நேரில் சந்தித்த சோமாசி முனிவர், தான் நடத்த உள்ள சோமயாகத்தில் தியாகராஜப் பெருமான் கலந்து கொள்ள நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். உடனே இருவரும் திருவாரூருக்கு வந்து தியாகராஜப் பெருமானிடம் தங்களது விருப்பத்தை கூறினர் அதற்கு பதில் அளித்த சுவாமி, உங்களது விருப்பத்தை ஏற்று நான் சோமயாகத்தில் கலந்து கொள்கிறேன்.
ஆனால் நான் எந்த உருவத்தில் வருவேன் என்பதை கூற மாட்டேன். ஏதோ ஒரு உருவத்தில் வருவேன். நீங்கள்தான் என்னை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். உடனே சோமாசி முனிவர், கோவிலுக்கு நேராக வந்து சோமயாகத்தை தொடங்கினார். வைகாசி மாசம் ஆயில்ய நட்சத்திர நாள் வந்தது. பூர்ணாகுதி செய்து அவி வழங்க வேண்டிய நேரமும் வந்தது
இறைவனின் நீச திருக்கோலம்
அப்போது திருவாரூரில் இருந்து தியாகராஜர், நீச கோலத்துடன் திருமாளத்துக்கு புறப்பட்டார். அப்போது நான்கு வேதங்களையும் 4 நாய்களாக்கி தோளில் இறந்த கன்றுக்குட்டியை போட்டுக்கொண்டு, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு விநாயகரையும், முருகனையும், மனித குழந்தைகளாக்கி, அம்பாளின் தலையில் சாராய கலயத்தை வைத்து நடந்து வந்தார். இதைக்கண்டதும் சோமயாகத்தில் கலந்து கொண்ட வேத விற்பனர்கள் பயந்து ஓடி விட்டனர்.
சோமாசி மாறர், பூர்ணாகுதி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார். அப்போது பூமியில் இருந்து திடீரென விநாயகப் பெருமான் தோன்றி எனது தாயும், தந்தையும் தான் இப்படி வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி, அனைவரின் பயத்தையும் போக்கினார். (யாகம் நடந்த இடத்தில் இன்னும் ஐயம் தீர்த்த விநாயகர் என்ற தனி கோவில் ஒன்று இருப்பதை காணலாம்).
தியாகராஜப் பெருமானும், நீலோத்பலாம்பாளும் யாகத்தில் கலந்து கொண்டு அவி பெற்றவுடன் சோமயாகி முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். இறைவன் வந்திருப்பதை அறிந்த வேத விற்பன்னர்கள் மீண்டும் யாகத்திற்கு வந்து தியாகராஜரை மனம் உருக வேண்டினர்.
சோம யாக பெருவிழா
இதனால்தான் வருடம்தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் சோமயாக பெருவிழா இந்த கோவிலில் நடத்தப்படுகிறது. பாவங்களை போக்க காசிக்கு சென்று நீராட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த காசியில் பிறந்த விமலன் என்ற அந்தணர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை செல்வம் இல்லாமல் இருந்தது.
தென்னாட்டை நோக்கி தல யாத்திரை சென்று தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று கருதி ஒவ்வொரு கோவிலாக சென்றார். கோவில், கோவிலாக சுற்றியும் பலனில்லை. அவரது பக்தியால் மகிழ்ந்த இறைவன் அவர் முன் தோன்றி எங்கு செல்கிறாய்? என்று கேட்டபோது அவர் தன் குறைகளை சொன்னார்.
அப்போது இறைவன், விமலனிடம் நீ கோவில் திருமாளம் சென்று மகா காளநாதரையும் அக்கோவிலில் எழுந்தருளி உள்ள குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும், முருகனையும் வழிபட்டால் உனக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகனுக்கு மகாதேவன் என்று பெயர் சூட்டுவாய் என்று கூறினார். இறைவனின் ஆணைப்படி அந்தணர் இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனை வழிபட்டு மகா தேவனை பெற்றெடுத்தார்.
தோஷம் நீக்கிய தலம்
அஷ்ட நாகங்களில் 2-வது நாகம் வாசுகி. இந்த நாகத்திற்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தை போக்க என்ன வழி என்று சிவபெருமானை தரிசித்து கேட்டது வாசுகி. கோவில் திருமாளம் மாகாளநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், தோஷம் போகும் என்று இறைவன் கூறியதையடுத்து இங்கு வந்து வழிபாடு நடத்தி தோஷம் நீக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், புத்திரபேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கி, ராகு தோஷம், நாக தோஷம், பிரம்மஹத்தி தோஷங்களை நிவர்த்தி செய்ய விரும்புவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில் இது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் திருவாரூருக்கு செல்லும் ரெயிலில் பயணம் செய்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.
தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் தஞ்சைக்கு ரெயிலில் வந்து தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயிலில் பயணித்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவிலை அடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்