search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    வாழ்வில் திருப்புமுனை தரும் திருமலை முருகன்
    X

    வாழ்வில் திருப்புமுனை தரும் திருமலை முருகன்

    • மலை உச்சியில் உள்ள கோவிலின் தீர்த்தத்தை ‘அஷ்டபத்ம குளம்’ என்று அழைக்கின்றனர்.
    • இந்த ஆலயத்தில் சித்திரை முதல் தேதியில் படித்திருவிழா நடைபெறும்.

    கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ளது, பண்பொழி. இங்கு சிறிய குன்றின் மீது திருமலை குமாரசுவாமி கோவில் இருக்கிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பண்பொழி. இங்கு அருள்பாலிக்கும் திருமலைக் குமாரசாமியைத் தரிசனம் செய்ய, 626 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிக்கட்டுகளின் வழியாக மலை ஏறிச் செல்லும் வழியில், இடும்பனுக்கும், தடுவட்ட விநாயகருக்கும் தனிக் கோவில்கள் இருக்கின்றன.

    கோவிலின் வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலில் வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் தில்லைக் காளி அம்மன், இந்த தலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள். மலை மீது வாகனங்களில் செல்வதற்கு ஏற்றவாறு சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் திருமலைக்குமரன் நான்கு கரங்களுடன், மேல் வலது கரத்தில் சக்தி ஆயுதம் ஏந்தியும், மேல் இடது கரத்தில் வச்சிராயுதம் ஏந்தியும், கீழ் வலது கரத்தில் அபய முத்திரை காட்டியும், கீழ் இடது கரத்தில் சிம்ம கர்ண முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறார். அதோடு முருகன் அருகில் வேலும், சேவல் கொடியும் இருக்கிறது.

    தல வரலாறு

    முன் காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக அங்கிருந்த புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீ அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப்பார். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடு" என்றார்.

    தான் கண்ட கனவு பற்றி, அப்போது பந்தளத்தை ஆட்சி செய்த அரசருக்கு, கோவில் அர்ச்சகரான பூவன்பட்டர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மன்னனின் உத்தரவின்பேரில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து முருகன் சிலை எடுத்து வரப்பட்டு, இந்த மலையின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் எழுப்பப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. மலை மீது அமையப் பெற்றுள்ள இந்த கோவிலின் முகப்பில், 16 படிகள் ஏறிச் சென்று வணங்கும் சன்னிதியில் உச்சி பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த பதினாறு படிகளை ஏறிச் சென்று உச்சி பிள்ளையாரை வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்தக் கோவிலில் உள்ள முருகன் சிலையின் மூக்கில் சிறிய காயம் இருப்பதாகவும், மண்ணில் புதைந்திருந்த சிலையை தோண்டி எடுத்த போது இந்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு 'மூக்கன்', 'மூக்காண்டி' என்றும், பெண் குழந்தைகளுக்கு 'மூக்கம்மாள்' என்றும் பெயர் வைக்கும் வழக்கம் உள்ளது.

    மலை உச்சியில் உள்ள கோவிலின் தீர்த்தத்தை 'அஷ்டபத்ம குளம்' என்று அழைக்கின்றனர். இந்தக் குளத்திற்கு 'பூஞ்சுனை' என்ற பெயரும் உண்டு. முன் காலத்தில் இந்த குளத்தில் குவளை என்னும் மலர், நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு மலர்தான் பூக்குமாம். அந்த மலரை எடுத்து, சப்த கன்னிமார்கள், இத்தல முருகப்பெருமானை வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த தீர்த்தம் 'பூஞ்சுனை' என்ற பெயரைப் பெற்றது. மேலும் தீர்த்தக் கரையில் சப்த கன்னியர் திருமேனிகள் இருப்பதும் இதை உறுதிபடுத்துகிறது. அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள், கவிராசப்பண்டாரத்தையா ஆகியோர், இத்தல முருகனைப் பற்றி பாடல் பாடியுள்ளனர். விசாக நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயமாக இந்த திருமலை முருகன் கோவில் திகழ்கிறது.

    இந்த ஆலயத்தில் சித்திரை முதல் தேதியில் படித்திருவிழா நடைபெறும். அதேபோல் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    செங்கோட்டையில் இருந்து வடமேற்கில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பண்பொழி கிராமம் உள்ளது. அங்கிருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால்தான் மலைமீது உள்ள திருமலை குமாரசாமி கடவுளை நாம் தரிசிக்க முடியும். இத்திருக்கோவில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    Next Story
    ×