search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருமால்பாடி அரங்கநாதர் திருக்கோவில்
    X

    திருமால்பாடி அரங்கநாதர் திருக்கோவில்

    • அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர்.
    • அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அருகே இருக்கிறது, திருமால்பாடி என்ற கிராமம். இங்கு அரங்கநாதப் பெருமாளாக, திருமால் காட்சி தரும் திருக்கோவில் அமைந்திருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிலை வடிவமாக அருள்புரிந்து வரும் திருமால், இந்த திருமால்பாடியில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்று ஒன்றில், அனந்த சயன கோலத்தில், அடியாளர்களுக்கும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார்.

    பல்வேறு புராணங்களை எழுதியவரும், வேதங்களை தொகுத்து வழங்கியவருமான வேதவியாசரின் மகன் சுகபிரம்ம ரிஷி. இவர் கிளி முகம் கொண்டவர். அந்த புராண காலத்தில் இப்பகுதி விரஜாபுரி என்று அழைக்கப்பட்டது. வைகுண்டத்தில் பிரவாகம் கொண்டு பாயும் புண்ணிய நதியின் பெயர் விரஜை. இதன் பெயரில் அமைந்த இடம்தான் விரஜாபுரி. இங்குள்ள குன்றின் மீது சுகபிரம்ம மகரிஷி, திருமாலை நோக்கி தவம் இயற்றினாா். பல ஆண்டுகளாக அவர் இருந்த தவத்தின் பயனாக, இந்த திருத்தலத்தில் தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக, சுகப்பிரம்ம ரிஷிக்கு திருமால் தரிசனம் தந்தார்.

    மேலும் வேண்டிய வரம் கேட்கும்படியும் கூறினார். அப்போது தனக்கு 'முக்திப்பேறு வேண்டும்' என்று கேட்டார் சுகப்பிரம்ம ரிஷி. அதற்கு அரங்கநாதர், "இத்தலத்திற்கு அருகில் உள்ள தீர்க்காசலம் என்னும் நெடுமலையில் தவம் புரிந்து வா. என்னுடைய ராம அவதாரத்தின் போது, லட்சுமணன், அன்னை சீதாபிராட்டி, அனுமன் புடைசூழ காட்சி தந்து, முக்திப்பேறு அருள்வேன்" என்று கூறி மறைந்தார். இக்குன்றில் தவத்தை முடித்து, அரங்கநாதரின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்து தவமிருந்தார். பின்னர் ராமச்சந்திர பிரபுவைக் கண்டு, வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம ரிஷி.

    இந்த புராண பின்னணியை மனதில் கொண்டு, கி.பி.1136-ம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால், இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அது முதல் அடியார்களின் குறைகளை நீக்கி அற்புதமாக அருள்பாலித்து வருகின்றார் அரங்கநாயகி உடனாய அரங்கநாத பெருமாள்.

    குளிர்ந்த ஏரி நீரில் பட்டு வீசும் தென்றலும், பூஞ்சோலைகளும் பசுமையான வயல்வெளிகளும் சூழ, அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர். 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் 108 படிகளைக் கடந்து இந்த குன்றின் மேல் உள்ள இறைவனைக் காணச் செல்ல வேண்டும். படிகளைக் கடந்து மேலே சென்றதும், மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக, மூன்று நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. முன் மண்டபத்தின் இருபுறமும் கருங்கல் திண்ணைகள். உள்ளே மகா மண்டபத்தில் நேராக தென்திசையை பார்த்தபடி வீர ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கின்றார்.

    சற்று இடதுபுறம் திரும்பினால், தாயார் அரங்கநாயகியின் சன்னிதியை தரிசிக்கலாம். இந்த தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்களங்களையும் அருளும் சக்தியாக திருவருள் பொழிகின்றாள். அவருக்கு அருகில் நரசிம்மரது தரிசனத்தைக் காணலாம். மகாமண்டபம் கடந்து, பெரிய அந்தராளத்தை அடைந்தால், கருவறையில் ஒய்யாரமாக சயனித்திருக்கும் அரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு தரிசிக்கலாம். 15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலை தலைக்கு வைத்தபடி, அனந்த சயனத்தில் பெருமாள் படுத்திருக்கிறார். அவரது தலையின் பக்கத்தில் ஸ்ரீதேவியும், கால் அருகில் பூதேவியும் அமர்ந்துள்ளனர்.

    அரங்கநாதரின் திருப்பாதங்களின் அருகே பிரகலாதனும், சுகபிரம்ம ரிஷியும் தவக்கோலத்தில் உள்ளனர். பரந்தாமனின் திருமுகமோ பக்தர்களை பார்த்தபடி இருப்பது சிறப்பு. தலைக்கு கீழே இரண்டு விரல்களையும் உள்ளே மடக்கி, மூன்று விரல்களை வெளியில் காட்டியபடி, 'நான் மூவுலகங்களையும் அளந்தவன்' என்று உரைக்கும் தொனியில் காட்சி தருகிறார், அரங்கநாதர். பக்தர்களை பார்த்தபடி இருக்கும் இவரது திருமுகம், பக்தர்களின் மனக் குறைகளை அகற்றி அருள்பாலிக்கும் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. சிலை வடிவில் உள்ள இந்த அரங்கநாதரின் முன்பாக, உற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீதேவி, பூதேவி உடனான சங்கு - சக்கரம் ஏந்திய திருமால் சேவை சாதிக்கின்றார்.

    அரங்கனின் தரிசனத்தை முடித்ததும், ஆலய பிரகாரத்தை வலம் வருகையில் ஆண்டாளை தரிசனம் செய்யலாம். சன்னிதிக்கு வெளியே தனிச் சன்னிதியில் அரங்கநாதரைப் பார்த்து இருகரங்களையும் கூப்பி தரிசித்த நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார் இருக்கிறார்.

    ஆலயத்தின் வடக்குப்புறம் சிறு வாசல் ஒன்று உள்ளது. அதில் சில படிகள் வழியாக கீழே இறங்கினால் சுனை வடிவில் உள்ள தல தீர்த்தத்தை காணலாம். இந்த தீர்த்தமானது, 'நாரத தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. பாறை மீது நின்றபடி கீழே உள்ள ஏரியையும், சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிப்பது பெருமகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும். வானர கூட்டங்கள் இங்கு பெருமளவில் உள்ளன. இந்த அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசலும் அமைந்துள்ளது.

    இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. கி.பி.1140-ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135-ல் சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529-ல் வீரசிங்கதேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால், இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அநேக வைணவ நிகழ்வுகளும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இத்தல மூலவரான அரங்கநாதரையும், தாயார் அரங்கநாயகியையும் வழிபாடு செய்து வருபவர்களுக்கு திருமண பாக்கியம் , குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மூலவருக்கு திருமஞ்சனம் செய்வித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இது தவிர அரசு வேலை, வேலையில் இடமாற்றம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காகவும் இந்த அரங்கநாதரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது வளத்தி என்ற ஊர். இங்கிருந்து தேசூர் செல்லும் சாலையில் சென்றால் அருந்தோடு என்ற கிராமம் வரும். இந்த கிராமத்தின் அருகில்தான் திருமால்பாடி திருத்தலம் உள்ளது.

    -பழங்காமூர் மோ.கணேஷ்.

    Next Story
    ×