search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்- புதுக்கோட்டை
    X

    திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்- புதுக்கோட்டை

    • பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.
    • புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெருமாள் கோவில்கள் பலவற்றில் மூலவர் நின்ற கோலத்திலோ அல்லது சயன கோலத்திலோ காணப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆலயத்தில் நின்ற கோலத்திலும், அனந்த சயனத்திலும் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

    தல வரலாறு

    முற்காலத்தில் திருமயம் மூங்கில் காடாக இருந்துள்ளது. பூலோகத்தை அசுரர்கள் ஆக்கிரமித்த போது, ரிஷிகள் எல்லாம் பயந்து மலைகள், குகைகளில் மறைந்து கொண்டனர். இதனால் உலகத்தில் யாகம் முதலான நல்ல காரியங்கள் நடைபெறவில்லை. தேவர்கள் கலக்கம் அடைந்தனர். சத்திய தேவதையும், தர்ம தேவதையும் வறுமையால் மிகுந்த துன்பமுற்றன. அந்த நேரத்தில் தர்ம தேவதை, காளையின் உருவம் கொண்டு அழகர் கோவிலை அடைந்து சித்திபெற்றது.

    சத்திய தேவதையோ மானாக மாறி, மூங்கில் காடான திருமயத்தை அடைந்தது. இங்குள்ள அழகிய மெய்யனை, சத்தியமூர்த்தியை வணங்கி வழிபட்டது. மேலும் உலகில் சத்தியம் நிலைக்க வேண்டும். வாய்மை வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், இங்குள்ள சத்திய தீர்த்தக்கரையில் தவம் செய்து சித்தி அடைந்தது.

    ஆலய அமைப்பு

    இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்து, கொடிமரத்தை தாண்டி செல்லும் போது, பள்ளி கொண்ட திருமெய்யன் சன்னிதியை காணலாம். அதற்கு அடுத்ததாக சத்தியமூர்த்தி பெருமாள் நின்ற கோலத்தில் காணப்படும் சன்னிதி உள்ளது. இதில் பள்ளி கொண்ட பெருமாள் சன்னிதி கருவறை, மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கொண்ட நிலையில் பெருமாள் சேவை அளிக்கும் கருவறையில், வைகுண்டத்தை காட்சிப்படுத்தும் வகையில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. 5 தலைகளை உடைய ஆதிசேஷன் மீது அனந்த சயனத்தில் இருக்கிறார் பெருமாள். அவரது காலடியில் பூதேவி, இதய கமலத்தில் ஸ்ரீதேவி, இடமிருந்து வலமாக கருடன், எம தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலது கடைக்கோடியில் அசுரர்கள் உள்ளனர். பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.

    கோவிலின் சத்திய புஷ்கரணி தீர்த்த குளம், தாமரை மலர் தோற்றத்தில் எண் கோண வடிவில் 8 படித்துறைகளுடன் அமைந்துள்ளது. இங்கு இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்கு பாலகர்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த தீர்த்த குளத்தில் தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என வாயினால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தீர்த்தகுளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும்.

    இந்தக் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, வைகுண்ட ஏகாதசி திருவிழா, ஆடிப்பூர திருவிழா, ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம், சித்ரா பவுர்ணமி விழா ஆகியவை விமரிசையாக நடை பெறும்.

    திருமணம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி வரும் பக்தர்கள் சத்தியமூா்த்தி பெருமாள் மற்றும் தாயாரை மனதால் வேண்டினால், அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும்.

    புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    Next Story
    ×