search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருமண தடை நீக்கும் திருவந்திபுரம் தேவநாதசாமி திருக்கோவில்- கடலூர்
    X

    திருமண தடை நீக்கும் திருவந்திபுரம் தேவநாதசாமி திருக்கோவில்- கடலூர்

    • திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும்.
    • இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும்.

    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரை யோரத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும்.

    கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார். கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.

    திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள். இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    புனித தீர்த்தங்கள்

    இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.

    தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா நடந்து வருகிறது. அதிகாலையில் 2 மணிக்கு பெருமாள் விஷ்வரூப தரிசனம் நடக்கிறது. சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மாலையில் சாமி வீதி உலா நடைபெறும்.

    கோவில் நடை திறக்கும் நேரம்

    இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.

    Next Story
    ×