search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோவில்
    X

    திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோவில்

    • ‘வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ’ எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார்.

    வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன்.

    மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.

    பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை. தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள்.

    தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம். திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.

    பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது.

    அலர்மேல்மங்கையின் தங்கத்தேர், வெள்ளித்தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்கச் செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் நிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை அஹோபிலம் நரசிம்மருக்கு இருவரும் அந்த திசை நோக்கி வைத்து நிவேதித்தார்களாம்.

    'வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுவதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். கீழ்த் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சானூர் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது.

    Next Story
    ×