என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
1300 ஆண்டுகள் பழமையான வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில்
- மூவரும் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு.
- வேதநாராயணரின் திருமேனியானது முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிற்றூர் ஆனூர். இங்கு மிகப்பழமையான சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் கம்பவர்மன், பார்த்திவேந்திர வர்மன் , முதலாம் ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராஜராஜன் முதலான மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். இத்தலமானது கல்வெட்டுக் களஞ்சியமாக காட்சி தருகிறது. கருவறையைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
சோழர் காலக் கல்வெட்டுக்களின் மூலம் இவ்வூரானது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் அமைந்திருந்தது என்பதையும், முதலாம் குலோத்துங்கச் சோழனது கல்வெட்டின் மூலம் இவ்வூர் 'ஆதியூரான சத்யாசிரிய குலகால சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆனியூர், ஆதியூர் எனும் பல பெயர்களில் இவ்வூரின் பெயர்கள் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. பதிமூன்றாம் நூற்றாண்டில் இத்தலம் 'சித்திரமேழி விண்ணகரம்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
மது, கைடபர் எனும் இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடம் இருந்து வேதங்களை பறித்துக் கொண்டு சென்றார்கள். பிரம்மா மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் இரண்டு அசுரர்களையும் வதம் செய்து வேதங்களை மீட்டெடுத்து மீண்டும் பிரம்மாவிடம் ஒப்படைத்தார். அதுவரையில் பிரம்மா ஒற்றை முகத்துடன் ஆனூரில் யாகம் வளர்த்துக் கொண்டிருந்ததாகவும், மகாவிஷ்ணு இத்தலத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து வேதங்களை அவரிடத்தில் ஒப்படைத்து இத்திருத்தலத்தில் வேதநாராயணராக எழுந்தருளியதாகவும் தலவரலாறு கூறுகிறது.
கிழக்கு திசை நோக்கி அமைந்த திருத்தலம். கோவிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பழமையான விளக்குத்தூண் காட்சி தருகிறது. சிதிலமடைந்த மதில்சுவர். ராஜகோபுரம் இன்றி காட்சி தரும் நுழைவு வாசல். கோவிலுக்குள் நுழைந்தால் பலிபீடம். அடுத்தபடியாக ஒரு சன்னிதியில் பெரியதிருவடியான கருடன் காட்சி தருகிறார்.
முன் மண்டபத்தின் இடது புறத்தில் சீதா தேவி சமேத கோதண்டராம சுவாமி வீற்றிருக்கிறார். வலதுபுறத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், பிரபையோடு ஒரு பக்த ஆஞ்சநேயர் மற்றும் பிரபையின்றி மற்றொரு பக்த ஆஞ்சநேயர் முதலானோர் அருளுகிறார்கள்.
கருவறையில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூவரும் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. வேதநாராயணர் தனது இடது திருப்பாதத்தை மடித்து பீடத்தில் வைத்து வலது திருப்பாதத்தை தாமரைப் பீடத்தின் மீது தொங்கவிட்டபடி எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும், கீழ் வலது திருக்கரத்தை அபய ஹஸ்தத்தில் வைத்தும், இடது திருக்கரத்தை ஆஹீவான ஹஸ்தத்தில் வைத்தபடியும் பெருமாள் தரிசனம் தருகிறார். வேதநாராயணரின் திருமேனியானது முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது என்று கூறப்படுகிறது. அவரது மார்பின் வலதுபுறத்தில் ஸ்ரீவத்சம் அமைந்துள்ளது. உற்சவரான ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் முன் மண்டபத்தில் காட்சி தருகிறார்.
ஒருசமயம் பாலாற்றுக்குள் மூலவரைப் போலவே ஒரு வேதநாராயணர் சிலை கிடைத்துள்ளது. சற்றே பின்னமடைந்த இச்சிலை கோவிலில் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே கருடாழ்வார் சன்னிதிக்கு அருகில் மிகப்பழமையான ஒரு விநாயகர் சிலை காட்சி தருகிறது.
'ஷீரநதி' என அழைக்கப்பட்ட பாலாறு, வேகவதியாறு, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடம் திருமுக்கூடல். இந்த நதிகள் தெற்கிலிருந்து வடக்காகப் பாயும் இடம் படாளம். இந்த இடத்திற்கு அருகில் ஆனூர் அமைந்திருப்பதால் இது தட்சிணப் பிரயாகைக்கு நிகராகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் அமைந்துள்ள வேத மங்கள தீர்த்தம் எனும் கிணற்றின் புனித நீரை அருந்துவதன் மூலம் பித்ருக்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.
வேத முழக்கங்கள் எந்நேரமும் இத்தலத்துப் பெருமாளைச் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். வேதநாராயணப் பெருமாளை தரிசித்தால் வேதங்களின் சக்தியால் நமது வாழ்வில் துன்பங்கள் யாவும் விலகி, கர்ம வினைகள் அழிந்து வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. ஆனூருக்கு மிக அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள நான்கு மலைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாக ஐதீகம். இம்மலைகள் வேதகிரி என்று அழைக்கப்படுகின்றன.
ஆனூர் தலத்தில் வருடப்பிறப்பு, புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு மற்றும் வைகுண்ட ஏகாதசி முதலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
காலை 9 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
செங்கல்பட்டிற்கு அருகில் பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் ஆனூர் அமைந்துள்ளது. செங்கல்பட்டில் இருந்து அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
-ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்