search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பதினெட்டாம்படி கருப்பணசாமி
    X

    பதினெட்டாம்படி கருப்பணசாமி

    • அழகரின் காவல்தெய்வம் 18-ம் படி கருப்பணசுவாமி கோவிலாக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
    • இங்கு 18 சித்தர்களின் சக்திகள் நிலை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோவில்மிகவும் பழமையும் பெருமையும் புகழும் பெற்றதாகும். இத்திருத்தலமானது பக்தர்கள் வேண்டிய வரங்களை வேண்டியபடி அருள்தரும் கள்ளழகர் பெருமாள் தலமாகும்.

    இக்கோவிலின் ராஜகோபுரத்தில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் உள்ளது. கோபுரம் சுமார் 112 அடி உயரம் கொண்டதாகும். இங்குள்ள கள்ளழகர் சித்திரை திருவிழாவின்போது மதுரை வண்டியூர் வந்து திரும்பும் வரை ஒவ்வொரு மண்டக படிகளிலும் குவிந்துள்ள பக்தர்கள் மீண்டும் மீண்டும் அழகரை பார்த்து தரிசனம் செய்ய தூண்டும்.

    இந்த கள்ளழகர் அபரஞ்சி தங்கத்தினால் உருவானவர். எத்தனை முறை பார்த்து வணங்கி னாலும் மறுபடியும் பார்த்து வணங்க வைக்கும் அபூர்வமான பெருமாள் அவர்.

    இத்தனை சிறப்புடைய பெருமாளை மலையாள தேசத்தை சேர்ந்த ஒரு அரசன் அழகர் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவரது அழகில் மயங்கி எப்படியா வது அழகரை தனது நாட்டிற்கு கொண்டு போய் வழிபட எண்ணினார். அதற்காக மந்திரத்தாலும், தந்திரத்தாலும் சிறந்து விளங்கிய 18 பேர்களை அனுப்பி கள்ளழகர் விக்கிரகத்தை எடுத்து வர கட்டளையிட்டார்.

    வந்தவர்கள் எவ்வளவோ முயன்றும் சிலையை எடுத்துச்செல்ல முடியவில்லை. அதனால் அவர்களுக்கு துணையாக ஒரு தெய்வத்தை அனுப்பினார். ஆனால் சகல சாஸ்திரங்களை கற்ற நிபுணர்களான பட்டர்கள் பெருமாளின் அனுகிரகத்தால் முன்கூட்டியே இந்த சூழ்ச்சியை கண்டுபிடித்து விட்டார்கள்.

    உடனடியாக வந்திருந்த 18 மாயாவி களையும் பிடித்து கோவில் வாசலிலே உயிரோடு பூமிக்கடியில் வைத்து மூடிவிட்டனர். இவர்களுக்கு துணையாக வந்த தெய்வமும் தானும் கோபுர வாசலிலேயே இருக்க வேண்டி கேட்டுக் கொண்டது. அதன்படி அழகரின் அர்த்த ஷாம நிர்மால்ய நைவேத்தியங்கள் அந்த தெய்வத்துக்கும் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவே அழகரின் காவல்தெய்வம் 18-ம் படி கருப்பணசுவாமி கோவிலாக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. இங்கு 18 சித்தர்களின் சக்திகள் நிலை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அழகர்மலை உச்சியில் ராமதேவர் ஐக்கியமானதாக கூறப்படுகிறது. இவர் 18 சித்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×