search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    27 நட்சத்திரங்களும்... பொதுவான குணங்களும்...
    X

    27 நட்சத்திரங்களும்... பொதுவான குணங்களும்...

    • ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள்.
    • 27 நட்சத்திரக்காரர்களின் இயல்பான குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

    அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை 'ஜென்ம நட்சத்திரம்' என்று கூறுவர்.

    ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணமுண்டு. அந்த அடிப்படையில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இயல்பாக அமைந்த குணங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. இவை பொதுவான பலன்கள் தான்.

    அசுவதி:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், செய்யும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பர். மனோதிடம் கொண்டவர்கள். உண்மைக்குப் புறம்பாக பேசமாட்டார்கள். முன்கோபத்தால் உறவினர்களைப் பகைத்துக்கொள்ளும் சூழல் ஏற்படும். லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்கள். உதவி செய்வதன் மூலம் பதவிகளைப் பெறுவர்.

    பரணி:- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், ஆரம்பித்த காரியத்தை முடிப்பதில் அசகாய சூரர்கள். குடும்பப் பாசம் உள்ளவர்கள். குடும்ப உறுப்பினர்களை அல்லது விபரம் அறிந்தவர்களைக் கலந்து ஆலோசித்தே எந்த முடிவும் எடுப்பர். பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்கள். கலைத்துறையில் ஈடுபாடு இருக்கும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பர்.

    கார்த்திகை:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பெருமைக்குரியவர்கள், பிறரால் மதிக்கப்படுபவர்கள். கம்பீரமான தோற்றத்தோடு காட்சியளிப்பர். கடமையைச் செவ்வனே செய்வார்கள். வழக்குகளில் வாதாடி வெற்றி பெறும் தன்மை உண்டு. இனிய பேச்சால் மற்றவர்களை வசமாக்கும் தன்மை கொண்டவர்கள்.

    ரோகிணி:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இரக்க குணம் கொண்டவர்கள். ஸ்திரமான மனது இவர்களுக்கு இருப்பது அரிது. வளர்பிறையும், தேய்பிறையும் வருவது போல இன்பமும், துன்பமும் கலந்த வாழ்வைப் பெறுவர். சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். அடிமைத் தொழிலைக் காட்டிலும் சுய தொழிலை விரும்புவார்கள்.

    மிருகசீர்ஷம்:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக விளங்குவர். இவர்கள் மனதில் உள்ளதை பிறர் அறிந்து கொள்ள இயலாது. சுய ரகசியங்களைக் காப்பாற்றுபவர்கள். பேச்சில் வல்லமை பெற்றவர்கள் என்பதால், பிறருக்கு பிடிகொடுக்க மாட்டார்கள்.

    திருவாதிரை:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் சகல துறைகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள். சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வார்கள். பகை பாராட்டும் தன்மை இவர்களிடம் காணப்படும். மற்றவர்கள் மத்தியில் தான், யார் என்பதை நிரூபிக்கப் பாடுபடுவர். மற்றவர்களிடம் யோசனை கேட்டாலும் தான் எடுத்த முடிவையே மேற்கொள்வர்.

    புனர்பூசம்:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். அன்பாகப் பேசிப் பழகுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் உண்டு. நட்பின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.

    பூசம்:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். தாய்ப்பாசம் மிக்கவர்கள். பெற்றோர்களின் ஆதரவால் பெரிய நிலையை அடைவர். செல்வந்தனாகத் திகழும் வாய்ப்பு உண்டு. மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். பொதுநலத்தில் ஈடுபட்டு நியாயத்திற்காக பாடுபடும் தன்மை கொண்டவர்கள்.

    ஆயில்யம்:- இது புதனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் எதிரிகளையும் தன்வசமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியமிக்கவர்கள். மனதில் உள்ள குறைகளை மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள். இவர்களைக் கூட்டாளிகளாக வைத்துக்கொள்பவர்கள் விரைவில் முன்னேற்றம் காண்பர்.

    மகம்:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். மிகுந்த சாமர்த்தியசாலிகள். கோபம் வந்தால் எதிரிகளை இரண்டில் ஒன்று ஆக்கிவிடுவர். அதிக நண்பர்கள் இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டுமே மனம் விட்டுப் பேசுவர். எதைச் சொன்னாலும் விவாதம் செய்த பிறகே ஏற்றுக்கொள்வர்.

    பூரம்:- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பழகுவதில் கண்ணியமிக்கவர்கள். பலவிதமான தொழில்களைச் செய்து வெற்றி காண்பர். கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள். அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முன்னின்று காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர்கள்.

    உத்ரம்:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி மிக்கவர்கள். யதார்த்தவாதி. தேசப்பற்று மிக்கவர்களோடு பழக்கம் அதிகம் இருக்கும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பர். எல்லோரும் விரும்பும் விதத்தில் நடந்துகொள்வர். பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.

    ஹஸ்தம்:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். மற்றவர்கள் போற்றும்படியான வாழ்க்கையை நடத்துபவர்கள். வீர தீரச் செயல்களில் விருப்பம் கொண்டவர்கள். சிறுவயது முதலே தொழில் செய்து சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள். குருபக்தியும், விசுவாசமும் இவர்களோடு இணைந்தே இருக்கும்.

    சித்திரை:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாகும். சரீரபலமும், திடமான பேச்சாற்றலும் கொண்டவர்கள். பிறருக்காக பரிந்து பேசி உரையாடி காரியங்களைச் சாதிப்பீர்கள். சிக்கனமாக வாழ்க்கை நடத்துவதில் வல்லவர்கள். கவுரவத்தைக் காப்பாற்றத் துடிப்பீர்கள்.

    சுவாதி:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். ஜனவசியம் அதிகம் பெற்றவர்கள். எதையும் ரசித்தும் பார்ப்பார்கள், ருசித்தும் பார்ப்பார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள். 64 கலைகளில் அதிகமான கலைகளை அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள். தனது விருப்பப்படியே எதையும் செய்வர்.

    விசாகம்:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். உறவினர்களையும், நண்பர்களையும் அதிகம் நேசிக்கக் கூடியவர்கள். வேத சாஸ்திரங்களை கற்று வைத்திருப்பர். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். பக்திமான், கூர்மையான புத்தியுடையவர்கள். மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசமாக காட்டிக் கொள்ளப் பிரியப்படுவர்.

    அனுஷம்:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். தோஷமில்லாத நட்சத்திரம் என்று சொல்வது வழக்கம். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் தன்மை கொண்டவர்கள். நல்ல குணமும், நல்ல மனமும், ஒரு காரியத்தைச் செய்து விட்டுப் பிறகு இப்படிச் செய்திருக்கலாமே என்று சிந்திப்பவர்களும் இவர்கள்தான்.

    கேட்டை:- இது புதனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். கடவுள் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். தன்னிச்சையாக செயல்படும்பொழுது தந்திரமான குணத்தைக் கையாள்பவர்கள். கள்ளம் கபடமில்லாத மனத்தைப் பெற்றவர்கள். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள்.

    மூலம்:- இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். உயர்ந்த சிந்தனை, கூர்மையான அறிவு படைத்தவர்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட்டால் முன்னேற்றத்தை விரைவில் காண இயலும்.

    பூராடம் :- இது சுக்ரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணமும் உண்டு. பெருந்தன்மையான குணமும் உண்டு. தாய்ப்பாசம் மிக்கவர்கள். பொதுநலத்தில் அக்கறை காட்டி புகழ் பெறுவார்கள். தொழில் நுணுக்கங்களைக் கற்று வைத்திருப்பர். தர்ம சிந்தனை அதிகம் உள்ளவர்கள்.

    உத்ராடம்:- இது சூரியனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இனிமையாகப் பேசுபவர்கள் எல்லோரிடமும் பிரியமாக நடந்து கொள்வர். பிறர்பொருள் மேல் விருப்பம் கொள்ளமாட்டார்கள். செய்நன்றி மறக்காத குணம் இவர்களுக்கு உண்டு. மூத்த சகோதரர்களிடம் பாசம் காட்டுவார்கள்.

    திருவோணம்:- இது சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். முன்பின் தெரியாதவர்களிடம் கூட மனம்விட்டுப் பேசுவர். தான தர்மம் செய்வதில் பிரியம் கொண்டவர்கள். முயற்சியில் சளைக்காமல், முன்னேற்றம் காண்பதிலேயே கவனமாக இருப்பர்.

    அவிட்டம்:- இது செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். எதிரிகளைக் கண்டு அஞ்சாதவர்கள். தான் சொல்லிய கருத்தை மற்றவர்கள் ஏற்க வேண்டுமென்று விரும்புபவர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற அற்புதக் குணம் கொண்டவர்கள். சொத்து சேர்ப்பதில் வல்லவர்களாக விளங்குவர்.

    சதயம்:- இது ராகுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். ஆன்ம பலமும், தேகபலமும் மிக்கவர்கள். பகைவர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தலைமைப் பதவிகள் இவர்களைத் தேடி தானாகவே வரும். திருப்பணிகள் செய்வதிலும் விருப்பம் கொண்டவர்கள். திக்கெட்டும் புகழ்பரப்பும் விதம் ஏதேனும் சாதனைகளைச் செய்வர்.

    பூரட்டாதி:- இது குருவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். நியாயம், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். பொருட்கள் தேடுவதில் சாதுரியமாக செயல்படுவர். நண்பர்களைப் பூரணமாக நம்பிச் செயல்படமாட்டீர்கள். உறவினர் பகை எப்போதும் இவர்களுக்கு இருக்கும். கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்தி காரியங்களை தொடங்கும் குணம் உண்டு.

    உத்திரட்டாதி:- இது சனியின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள் பிறருக்கு உதவி செய்யும் குணம் பெற்றவர்கள். பிறருக்கு கொடுத்த வாக்கைக் எப்படியும் காப்பாற்றிவிடுவீர்கள். உறவினர்களை ஆதரிக்கும் குணம் உண்டு. சந்தர்ப்பத்திற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொள்வார்கள். தர்ம காரியங்களை செய்வதில் நாட்டம் கொள்வர்.

    ரேவதி:- இது புதன் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம். பிறரிடம் ஆலோசனை கேட்டு நடக்க விரும்புவர். பேச்சாற்றல் மிக்கவர்கள். பிறரை அணுகும் முறையில் திறமைசாலிகளாக விளங்குவர். உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று எடுத்துரைப்பர்.

    'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    Next Story
    ×