search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நன்மைகள் நிறைந்த உன்னதமான இரவு
    X

    நன்மைகள் நிறைந்த உன்னதமான இரவு

    • சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்ல இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது.
    • வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.

    உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டவும், அவர்களை சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்லவும் இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது. கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய 5 கடமைகளை உள்ளடக்கியது இஸ்லாம் மார்க்கம்.

    'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்' என்பதே முதல் கலிமா ஆகும். இந்தக் கலிமாவை யார் ஒருவர் உள்ளத்தால் ஏற்று நாவால் சொல்கிறாரோ அவர் நற்பாக்கியம் பெற்றவர்களில் இடம்பிடித்துவிடுவார்.

    அடுத்தது தொழுகை. கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆணுக்கும் 7 வயது முதல் மரணம் வரை தொழுகை கட்டாயம் ஆகும். தொழுகை மனிதர்களை நேர்வழியில் நடத்தி இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற உதவுகின்றது.

    தொழுகைக்கு அடுத்து வருவது நோன்பு. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைக்க வேண்டும். சூரிய உதயத்தில் இருந்து மறையும் வரை எதையும் உண்ணாமல், பருகாமல் இருந்து மன ஆசைகளை கட்டுப் படுத்தி நோன்பு நோற்க வேண்டும். இரவு நேரங்களில் தொழுகையில் ஈடுபடவேண்டும். பகல் முழுவதும் பசித்திருப்பதாலும், தாகத்துடன் இருப்பதாலும் உடலும் உள்ளமும் தூய்மை பெறுகிறது. இறையச்சத்துடன் நடத்தப்படும் தொழுகைகள் நமது பாவங்களுக்கு மன்னிப்பை வழங்குகிறது.

    மேலும் பிறரின் பசித்துன்பத்தை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    நோன்பைப் போன்று ஜகாத்தும் முக்கிய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது வருமானத்தில், செல்வத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதுவே `ஜகாத்' என்று சொல்லப்படுகிறது. ரமலான் நோன்பில் வரும் முக்கியமான இரவு லைலத்துல் கத்ர் இரவாகும்.

    `நபியே! லைலத்துல் கத்ர் என்றால் என்னவென்று நீர் அறிவீரா? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்' என்று திருக்குர்ஆன் (97:23) கூறுகின்றது.

    மகத்துவமும், புனிதமும் மிக்க அந்த இரவு ரமலானில் எப்பொழுது வருகிறது?. இது குறித்த நபி மொழி வருமாறு:

    லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு எப்பொழுது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இரண்டு பேர் தங்களுக்குள் கடன் சம்பந்தமான சர்ச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதை தீர்த்து வைப்பதில் நபி களார் ஈடுபட்டதால், அந்த இரவு எந்த நாள் என்று குறிப்பிட்டுச் சொல்வதை இறைவன் மறக்க செய்துவிட்டான்.

    என்றாலும், அந் நாளில் மட்டும் நற்கருமங்களை செய்து விட்டு மக்கள் மேம்போக்காக இருந்து விடக்கூடாது என்பதால் 'மறக்கடிக்கச் செய்ததும் நன்மைக்கே' என்று கூறிய நபிகளார், 'ரமலானில் கடைசி பத்தில் ஒற்றைப்படையான இரவில் (21, 23, 25, 27, 29) தேடிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்'. (நூல்: மிஷ்காத்)

    இமாம் ராஜி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'இந்த இரவில் வானவர் எல்லோரும் சாந்தி மயமாகட்டும் என்று கூறிக் கொண்டு இருப்பார்கள். அதிகாலையில் புறப்படும் போது மலக்குகள், 'இந்த இரவில் முகம்மதுடைய (ஸல்) சமுதாயத்திற்கு இறைவன் என்ன செய்தான்?' என்று கேட்பார்கள்.

    உடனே வானவர் தலைவர், `இறைவன் தனது அருள் பார்வையை செலுத்தினான். அவர்கள் அனைவரின் பாவத்தையும் மன்னித்தான். அதே நேரத்தில், மது அருந்துபவர், பெற்றோருக்கு எதிராக இருப்பவர், சொந்தங்களை துண்டித்து வாழ்பவர், சகோதரனிடம் சண்டைபோட்டு மூன்று நாளுக்கு மேல் பேசாமல் இருப்பவர் ஆகியோரை இறைவன் மன்னிப்பதில்லை, அவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை என்று கூறினார்.

    மனிதர்கள் பலரும் பாவம் செய்பவர்களாகவே உள்ளனர். மனிதன் பாவத்தில் இருந்து விடுபட்டு, பாவ மன்னிப்பு பெற்று இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் திருப்பொருத்தத்தை அடையவே இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகின்றது. மேலும் பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    `நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருகுர்ஆன் 2:222). இது போல நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிடும்போது, `எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறாரோ அவர்தான்' என்று கூறினார்கள்.

    `நபியே! இறை நம்பிக்கை கொண்டு நல்ல செயல் களைச் செய்வோருக்கு சொர்க்கம் உண்டு என்று கூறுங்கள்' என்பது இறை கட்டளையாகும். உலக மக்கள் அனைவரும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நோன்பு வைத்து லைலத்துல் கத்ர் என்ற உன்னதமான இரவை பெற்று உளமார இறைவனை தொழுது சொர்க்கத்தைப் பெற அல்லாஹ் வாய்ப்பை வழங்குவானாக, ஆமீன்.

    Next Story
    ×