search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் திரளான பக்தர்கள் வழிபாடு
    X

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

    • ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.
    • பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவில் சனி பரிகார தலமாக உள்ளது.

    இந்த கோவிலுக்கு முன்பு செல்லும் சுரபி நதிக்கரையில் பக்தர்கள் நீராடி எள்சாதம், நெய் தீபம் ஏற்றி கருப்பு வேட்டி, பூமாலை, பழம், படையல் செய்து வழிபாடு நடத்தினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் முக்கிய திருவிழாவாக ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.


    இந்த திருவிழாவின் போது சனீஸ்வரர் திருக்கல்யாணம், துணை சன்னதியான கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்தல், மதுபான படையல், ஆடு, கோழிகளை பலியிட்டு விருந்து வைத்தல் ஆகிய வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி சென்றனர். பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    நடப்பாண்டில் குச்சனூர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.1 கோடியில் துணை சன்னதிகளான விநாயகர், முருகன், கருப்பணசாமி, பலிபீடம், கொடி மரம் உள்ளிட்ட 14 இடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை, பகல், இரவு ஆகிய 3 கால பூஜைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 40 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×