search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலைக்கு பக்தர்களுடன் வரும் பெண்கள் தங்குவதற்கு பம்பையில் சிறப்பு மையம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சபரிமலைக்கு பக்தர்களுடன் வரும் பெண்கள் தங்குவதற்கு பம்பையில் சிறப்பு மையம்

    • மையத்தில் ஒரே நேரத்தில் 50 பெண்கள் தங்கலாம்.
    • மையத்தில் ஓய்வு அறை, உணவளிக்கும் அறை மற்றும் கழிப்பறை உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான மணடல பூஜை தற்போது நடந்து வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்கிறார்கள்.

    சபரிமலைக்கு 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்கு குறைந்த பெண்கள் செல்ல முடியாது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களே சபரிமலைக்கு செல்ல முடியும். இதனால் வெளிமாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்களுடன் வரக்கூடிய பெண்கள், தங்கும் வகையில் தங்குமிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

    பெண்களுக்கு பாதுகாப்பான ஓய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசாரும் முன்வைத்திருந்தனர்.

    இதையடுத்து பம்பையில் பெண்களுக்கான ஓய்வு மையம் அமைக்க தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி ஐயப்ப பக்தர்களுடன் வரக்கூடிய பெண்கள் தங்குவதற்காக சிறப்பு மையம் பம்பை கணபதி கோவில் அருகே அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பம்பை தனி அலுவலர் ஜெயசங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    1000 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 50 பெண்கள் தங்கலாம். இந்த மையம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டதாகும்.

    சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுடன் வந்திருக்கும் குறைந்த வயது பெண்கள் இந்த மையத்தில் வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஓய்வெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலைக்கு வரக் கூடிய குழந்தைகளின் தாய் மார்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஓய்வு அறை, உணவளிக்கும் அறை மற்றும் கழிப்பறை உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.

    Next Story
    ×