search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை ஆடிப்பெருக்கு விழா: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய திடீர் தடை
    X

    காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதை இரும்பு தடுப்புகளை வைத்து இருப்பதை படத்தில் காணலாம்.

    நாளை ஆடிப்பெருக்கு விழா: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய திடீர் தடை

    • சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின் போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது.
    • மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் காவல்துறை மற்றும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வதற்கு தடை விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது.

    இதனிடையே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, மாரப்பம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளி, குறும்பல மகாதேவி, அரசம்பாளையம், ஜேடர் பாளையம் தடுப்பணை, ஜேடர்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கண்டிப்பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல் பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர் மற்றும் பாலப்பட்டி வரையிலான காவிரி கரையோர பகுதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், முளைப்பாரி விடுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பாக தண்டோரா மூலமும் மற்றும் ஒலிபெருக்கி மூலமும், எச்சரிக்கை பலகைகள் அமைத்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி,கலையரசன், காவல் ஆய்வாளர் வீரம்மாள் உள்ளிட்ட போலீசார் காவிரி ஆற்றின் நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×