என் மலர்
நாமக்கல்
- எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை.
- வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
நாமக்கல்:
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.
அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை. பாதகமாகத்தான் உள்ளது. விதிமுறைகளை தளர்த்த நாங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. புதிய ஒப்பந்தத்தின் விதிமுறையால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். நஷ்டத்தில் எங்களால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாது. அதனால் நாளை (27-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். 4 ஆயிரம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயங்காது. எரிவாயு ஏற்றும் 10 இடங்களில் லோடுகளை ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பிற மண்டலத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம. அவர்களும் போராட தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசி குமரிபாளையம் காந்தமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (29). இவரது மனைவி தன்யா (25), இவரது மாமியார் கோகிலா (45). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு மோகனூரில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இதேபோல் அணியாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள பிள்ள விடுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி பகுதியை சேர்ந்த இளவரசன் (18) ஆகிய 2 பேர் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நாமக்கல்-மோகனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார்.
இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நாமக்கல்-மோகனூர் சாலையில் எதிர் எதிரே சென்றபோது நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் நவீன், தன்யா, கோகிலா ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தன்யாவை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், நவீனை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கோகிலாவை அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அதேபோல் இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் பாலகிருஷ்ணன், இளவரசன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளவரசனை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் மற்றும் அவரது மாமியார் கோகிலா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீர் விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- இனி வரும் நாட்களில் முட்டை அதிக அளவில் தேங்க வாய்ப்புள்ளது.
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பகுதிகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த கோழிகள் மூலம் தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகத்தின் சத்துணவு திட்டத்திற்கு தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கிறது. ஆனாலும் நிர்ணயித்த விலையை விட முட்டையை குறைந்த விலையில் விற்பதாக புகார் எழுந்ததால் அதனை கண்காணிக்க குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி 490 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக சரிந்து தற்போது 380 காசுகளாக உள்ளது. இதனால் கடந்த 8 நாட்களில் மட்டும் முட்டை விலை 110 காசுகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த திடீர் விலை சரிவுக்கான காரணம் குறித்து முட்டை பண்ணையாளர்கள் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஆண்டு வரை 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் முட்டை உற்பத்தி படிப்படியாக அதிகரித்து 5 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆனால் முட்டை உற்பத்தி அதிகரித்த நிலையில் அதற்கேற்றவாறு முட்டை விற்பனை அதிகரிக்கவில்லை. குறிப்பாக குளிர் காலத்தில் முட்டை விற்பனை அதிகரிக்கும், கோடை காலத்தில் முட்டை விற்பனை குறையும், அதே போல வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் முட்டையின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன் நுகர்வு குறைந்துள்ளது.
மேலும் ஆந்திர மாநிலம் முட்டை உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ளது. தற்போது ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் முட்டை விலை அங்கு வேகமாக சரிந்துள்ளது. இதனால் அங்குள்ள முட்டைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை குறைக்காவிட்டால் இங்கு கொண்டு வந்து ஆந்திர முட்டைகளை அதிக அளவில் விற்பனை செய்வார்கள். இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முட்டை விலை குறைந்த பின்னரும், தேவை குறைந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேங்கி உள்ளது. இனிவரும் நாட்களில் முட்டைகள் அதிக அளவில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தேசிய ஒருங்கிணைப்புக்குழு 380 காசுகளுக்கு முட்டை விலையை நிர்ணயித்துள்ள நிலையில் அதை விட குறைவாக 10, 20 காசுகள் குறைத்து முட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்கிறார்கள். ஆனாலும் இனி வரும் நாட்களில் முட்டை அதிக அளவில் தேங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.
- அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விவசாய நிலத்தில் காலாவதியான ரசாயனங்களை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர். 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.
அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமப்பட்டனர்.
கெமிக்கல் பாக்ஸ் மற்றும் கெமிக்கல் பேரல்களை விவசாய நிலங்களில் கொட்டி சென்றுள்ளதாகவும் ரசாயனங்களை கொட்டி சென்றது யார் என்று தெரியவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.
- படுகாயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர் அருகே உள்ள கோலாரம் தேவேந்திர தெரு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (54). அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் அசோக் குமார் (35 ). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை அண்ணாதுரை கோலாரம் அருகே உள்ள கரிச்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அசோக்குமாரும் கரிச்சிபாளையம் பகுதிக்கு சென்று மது அருந்திக் கொண்டிருந்தார். போதையில் முன் விரோதம் காரணமாக அசோக்குமாருக்கும், அண்ணாதுரைக்கும் வாய் தகராறு ஈடுபட்டு அடிதடி தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரமடைந்த அசோக்குமார் வீட்டிற்கு வந்து அவரது அண்ணன் சின்னசாமி (40), அவரது சகோதரி கோமதி (45) ,அவர்களது தந்தை வீரமணி (70) ஆகியோரிடம் டாஸ்மார்க் கடையில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வீரமணி, கோமதி, சின்னசாமி ஆகியோரை அசோக்குமார் அழைத்துக் கொண்டு அண்ணாதுரையின் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர்.
அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் சூரி கத்தியால் அண்ணாதுரையை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்ததை பார்த்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .
பின்னர் அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசோக்குமார், சின்னசாமி, கோமதி, வீரமணி ஆகிய 4 பேரையும் பிடித்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரவண பெருமாள் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
- கோமதி ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ச்செல்வியின் அம்மா பாப்பாத்தியுடன் காரில் சென்று தனலட்சுமி வீட்டை தேடி உள்ளார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 77). இவருக்கு 2 மகன்கள். இதில் ஒரு மகன் இறந்துவிட்ட நிலையில் சரவண பெருமாள் என்கிற ஒரு மகன் மட்டும் உள்ளார்.
இந்த நிலையில் சரவண பெருமாள் வரப்பாளையம் பகுதியை சேர்ந்த வேறு சமூகத்து பெண்ணான தமிழ்ச்செல்வி (41) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு தாயாரை விட்டு பிரிந்து வரப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே தனலட்சுமி தனது மகனிடம் மருமகள் தமிழ்ச்செல்வியை விட்டு பிரிந்து வந்தால் உனக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தருவதாகவும், சொத்தில் பங்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் சரவண பெருமாள் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனிடையே தனது மாமியாரின் திட்டதை அறிந்த தமிழ்ச்செல்வி என்னிடம் இருந்து எனது கணவரையே பிரிக்க முடிவு செய்கிறாயா? உன்னையே நான் தீர்த்துக்கட்டுகிறேன் என தானும் ஒரு திட்டத்தை வகுத்தார்.
மாமியாரை கொலை செய்து விட்டால் சொத்து முழுவதும் தனக்கு கிடைத்துவிடும். தனது கஷ்டம் தீர்ந்து விடும் என கருதிய தமிழ்ச்செல்வி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தனது தாயார் பாப்பாத்தியுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வி திட்டம் தீட்டி வந்த நிலையில், தனது கணவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஊசி போட அடிக்கடி வீட்டுக்கு வரும் திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நர்சிங் உதவியாளராக வேலை செய்து வந்த கோமதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்ச்செல்வி, கோமதியிடம் 'மக்களை தேடி மருத்துவம்' திட்ட முகாமின் நர்சாக நடிக்க செய்து, தனலட்சுமி வீட்டுக்கு சென்று உடல் நிலையை பரிசோதிப்பது போல் நடித்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் தனக்கு வரும் சொத்தில் ஒரு பெரும் தொகையை தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதற்கு உடன்பட்ட கோமதி ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ச்செல்வியின் அம்மா பாப்பாத்தியுடன் காரில் சென்று குச்சிபாளையத்தில் இறங்கி தனலட்சுமி வீட்டை தேடி உள்ளார். வீடு அடையாளம் காணப்பட முடியாத நிலையில் அருகில் இருந்தவரிடம் விசாரித்த போது தனலட்சுமியின் பேத்தி கீர்த்தியை அடையாளம் காட்டியுள்ளனர்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வயதானவர்களை வீட்டுக்கே சென்று உடல்நிலை பரிசோதித்து மருந்து கொடுக்க வந்துள்ளதாகவும், தனலட்சுமிக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியதால் கீர்த்தி அவரை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பரிசோதிப்பது போல் நடித்து தனலட்சுமிக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும், அதனால் ஊக்க மருந்து தருகிறேன். இதை குடித்தால் சரியாகி விடும் என கூறி வீட்டில் இருந்த அனைவருக்கும் கோமதி குளிர்பானத்தை கொடுத்துள்ளார் .
ஏற்கனவே திட்டமிட்டு அடையாளம் செய்து வைத்திருந்த விஷம் கலந்த குளிர்பானத்தை தனலட்சுமிக்கு வழங்கியுள்ளார். இதனை குடித்த தனலட்சுமி கசப்பதாக கூறியதை அடுத்து அப்படித்தான் இருக்கும் என சமாதானப்படுத்திவிட்டு வேகமாக வந்த கோமதி, பாப்பாத்தி இருந்த காரில் ஏறி ஊருக்கு சென்று விட்டார்.
சற்று நேரத்தில் தனலட்சுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் கீர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாட்டி தனலட்சுமியை கீர்த்தி அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து விட்டு கோமதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நீங்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததால் தனலட்சுமி மயக்கம் அடைந்து விட்டார் என கோமதியிடம் கூறியபோது சற்று நேரத்தில் சரியாகும் என கூறிய கோமதி போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
இதில் சந்தேகம் அடைந்த கீர்த்தி இது குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் 'மக்களை தேடி மருத்துவ முகாமில்' கோமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாரா?, அவர் குச்சிபாளையம் செல்ல பணிக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்த போது அவ்வாறு ஒருவர் பணியில் இல்லை என்பதும், குச்சிபாளையத்துக்கு யாரும் அனுப்பப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் போலி நர்சு கோமதியை பிடித்து விசாரித்த போது அவர் முழு உண்மைகளையும் போலீசாரிடம் தெரிவித்தார். தமிழ்செல்வியும், அவரது அம்மா பாப்பாத்தியும், திட்டமிட்டு கொடுத்தபடி பணத்துக்கு ஆசைப்பட்டு வெள்ளை கோர்ட்டு, பழைய ஐ.டி. கார்டு ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டு நர்ஸ் போல நடித்து தனலட்சுமி வீட்டுக்கு சென்று அவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்.
இதன்பேரில் சொத்துக்கு ஆசைப்பட்டு மாமியாருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மருமகள் தமிழ்ச்செல்வி, அவரது தாயார் பாப்பாத்தி, அவருக்கு உடந்தையாக இருந்த கோமதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேரும் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- சரஸ்வதி வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எலந்த குட்டை அடுத்த சின்னம்மாள் காடு கட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி என்கிற கஸ்தூரி (43). இவர் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் தனது தந்தையின் வீட்டிற்கு அருகில் குடிசை வீட்டில் குடியிருந்து வந்தார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு கஸ்தூரி டீ வைக்க விறகு எடுத்து பற்றவைத்தபோது எதிர்பாராத விதமாக தீ குடிசையில் பற்றியது.
இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி வீடு தீ பிடித்து விட்டதாக அருகில் குடியிருந்த தனது தந்தையை சத்தம் போட்டு எழுப்பினார். பின்னர் மீண்டும் கஸ்தூரி வீட்டுக்குள் பொருட்கள் எடுக்க சென்றார். அப்போது வெளியே வரமுடியாமல் தீயில் அவர் மாட்டிக்கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வெப்படை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். அப்போது சரஸ்வதி வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறை மூலம் உடலை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பள்ளிபாளையம் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
- மல்லிகா பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அன்னை சத்யாநகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 2-வது மாடியில் மல்லிகா, என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் சுமார் 4 மணி அளவில் வீட்டில் சுடு தண்ணீர் வைத்து கொண்டிருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் மல்லிகா வீட்டிற்குள் புகுந்து மல்லிகாவை தாக்கி அடுப்பில் வைத்திருந்த சுடு தண்ணீரை எடுத்து மல்லிகா மேல் ஊற்றி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்தனர். மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த 2 வாலிபர்களும் தப்பி ஓடினர்கள். பொது மக்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை விரட்டி சென்றனர். சுமார் 2 கி.மீ துாரம் விரட்டி சென்று காட்டூர் பகுதியில் 2 பேரையும் பிடித்து, தர்ம அடி கொடுத்து கயிற்றில் கட்டினார்கள்.
இது குறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்ததும் பொது மக்கள் பிடித்து வைத்திருந்த 2 பேரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். சுடு தண்ணீர் ஊற்றியதில் படுகாயமடைந்த மல்லிகா பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணையில் பிடிப்பட்டவர்கள் துாத்துக்குடியை சேர்ந்த அப்துல் (21), சாந்தகுமார் (21), என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் இந்த நகை பறிப்பில் தொடர்ப்புள்ள மல்லிகாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஐஸ்வரியா (24), மணிமேகலை (30), ஆகிய 2 பெண்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தனக்கு வர வேண்டிய பணம் குறித்த பட்டியலையும் எழுதியிருந்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்தி என்கிற செல்வகுமார் (வயது 33). கட்டனாச்சம்பட்டி பெட்ரோல் பங்க் எதிரில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சவுமியா (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சனா என்கிற திவ்யா (8), 6 மாத ஹரிசிதா பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர்கள் ராசிபுரம் டவுன் ஆத்தூர் சாலையில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அருகில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். நேற்று மதியம் வெல்டிங் பட்டறையை மூடிவிட்டு செல்வகுமார் தனது பெற்றோர் வசிக்கும் கட்டனாச்சம்பட்டியில் உள்ள வீட்டுக்கு சென்றார்.
பின்னர் தனது தந்தை விஜயகுமாரிடம் ரூ.100 கொடுத்து எனக்கு சாப்பாடு வாங்கி வா என்றும், வீட்டை வெளியே பூட்டிவிட்டு செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். சாப்பாடு வாங்கிக்கொண்டு விஜயகுமார் வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் விட்டத்தில் சேலையால் மகன் செல்வகுமார் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த உருக்கமான கடிதத்தில் மனைவி சவுமியாவுக்கு செல்வகுமார் எழுதியிருப்பதாவது:-
நான் சின்ன வயசுலா இருந்து ரொம்ப கஷ்டபட்டேன். ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலை செய்த யாரும் காசு சரியா தரல. 2 பிள்ளைங்க நல்லா பாத்துகோ. அவங்கள அடிக்காதா, எல்லா மாறிடும்.
ஒரு வாரமா தூங்கல. வி.நகரை சேர்ந்த வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். அதற்கு என்னிடம் காசோலை வாங்கி விட்டு என்னை ரொம்ப பிளாக் மெயில் பண்ணிட்டாங்க. அவர் 10 நாள் வட்டி கொடு என கேட்டு என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான். நான் எவ்ளோ பணம் தர முடியும். என்னோட வாழ்க்கை முடிஞ்சு போச்சு.
நான், ஒரு சிலரிடம் சீட்டு பணம் போட்டேன். அந்த பணமும் சரியாக கிடைக்கல. என் வாழ்க்கையிலா சவுமியா உனக்கு நான் எதுவும் செய்ல. பாப்பா 2 பேரையும் நல்லா பாத்துக்கோ. அழ கூடாது.
வட்டி கட்ட ஒரு வாரம் தூங்கல. ரொம்ப வட்டி கட்டிட்டேன். வட்டி கொடுத்த விபரம் ஜிபே, போன் பே ஹிஸ்ட்ரில பாருங்க. எவ்வளவு காசு கொடுத்து இருக்கேன் தெரியும்.
வி. நகரை சேர்ந்தவர் மட்டும் எல்லா காசும் நேர்ல வாங்கிட்டான். அவன் தான் என் சாவுக்கு காரணம். அவன் கிட்டதான் என் காசு போச்சு.
என் குடும்பத்த காப்பாத்துங்க... முரளி, விக்னேஷ் பிளிஸ் எனக்காக காப்பாத்துங்க. சாரிடா உங்கள விட்டு போறேன்.
நான் இந்த முடிவு எடுக்க கூடாது. எனக்கு தெரியும். வாங்கிய காசுக்கு மேல வட்டி கொடுத்துட்டேன். என் குடும்பத்துக்கு எந்த பிரச்சினையும் வர கூடாதுனு காவல் துறை கிட்ட கேட்டுக்கிறேன.
பாப்பா அழதே, அப்பா உன் கூட தான் இருக்கேன். ஐ லவ் யூ சவுமியா, திவ்யா, ஹரிசிதா.
இவ்வாறு அவர் எழுதியிருந்தார்.
மேலும் தனக்கு வர வேண்டிய பணம் குறித்த பட்டியலையும் எழுதியிருந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வாக்கு அரசியலுக்காக வழங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம்.
- மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம்.
நாமக்கல்:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு ரூ.10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதை கட்டி முடிக்க இன்னும் பல ஆண்டுகளாகும். தி.மு.க. தமிழகத்தில் அடிப்படை தேவைகளுக்கு செலவு செய்வதில்லை. தேவையில்லாதவைகளுக்கு அள்ளித்தெளித்துக் கொண்டிருக்கிறது. நான் தமிழகத்திற்கு வந்திருப்பது அரசியலை தூய்மை செய்வதற்காக. ரூ.3 லட்சம் கோடி பட்ஜெட் போடுகிறார்கள் என்றால், ரூ.60 ஆயிரம், ரூ.70 ஆயிரம் கோடிகள் எதற்காக செலவு செய்கிறார்கள்? என்பதே தெரியவில்லை. மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். வாக்கு அரசியலுக்காக வழங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம்.
தமிழகத்தில் திராவிட ஆட்சியால்தான் அருந்ததிய மக்கள் மருத்துவ படிப்பிற்கு அதிக அளவில் சேர முடிகிறது என அமைச்சர் மதிவேந்தன் கூறி உள்ளார். சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது? தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்தது. தற்போது 6-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. இன்றைக்கும் பட்டியல் சமுதாய மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். 75 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தி.மு.க. பட்டியல் சமுதாய மாணவர்களை உயர்த்துவதற்கு என்ன செய்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோளமுத்து மற்றும் பெரியக்காள் ஆகிய 2 பேரை தாக்கியுள்ளனர்.
- இரண்டு சமூகத்திற்கு இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அமைதி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது கவுண்டம்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த வியாழக்கிழமை இன்னொரு சமூகத்தினர் வசிக்கும் சாலையின் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வேகத்தடை உள்ளது மெதுவாக செல்லுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. அப்போது இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது இரு சமூகத்தினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் சோளமுத்து மற்றும் பெரியக்காள் ஆகிய 2 பேரை தாக்கியுள்ளனர். மேலும் சோளமுத்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயம் அடைந்த சோளமுத்து மற்றும் பெரியக்காள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து நடவடிக்கை எடுக்க கோரி சோளமுத்து மற்றும் பெரியக்காள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் காயம் அடைந்த பெரியக்காள் ராசிபுரம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராசிபுரம் போலீசார் சஞ்சய் (23) மணிகண்டன்(25) உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர இரண்டு சமூகத்திற்கு இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அமைதி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டையில் புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டு 2 முறை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகை பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்கழி மாதத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி (வியாழக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து நடப்பாண்டு 2-வது முறையாக மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று (30-ந்தேதி) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி ஒரு டன் வண்ண மலர்களால் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிப்பட்டு இருந்தது.
அதிகாலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.
1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
காலை 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு நல்லெண்ணெய், பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
பின்னர் மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கோவில் பட்டாச்சாரியார்கள் பூஜை பணிகள் செய்தனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் வரிசையாக சென்று வரும் வகையில் கோவில் பகுதிகளிலும், கோவில் அமைந்துள்ள தெருக்களிலும் பேரிகார்டு வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையாக வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழாவையொட்டி நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.