என் மலர்
வழிபாடு
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்
- தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டையில் புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டு 2 முறை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகை பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்கழி மாதத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி (வியாழக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து நடப்பாண்டு 2-வது முறையாக மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று (30-ந்தேதி) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி ஒரு டன் வண்ண மலர்களால் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிப்பட்டு இருந்தது.
அதிகாலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.
1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
காலை 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு நல்லெண்ணெய், பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
பின்னர் மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கோவில் பட்டாச்சாரியார்கள் பூஜை பணிகள் செய்தனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் வரிசையாக சென்று வரும் வகையில் கோவில் பகுதிகளிலும், கோவில் அமைந்துள்ள தெருக்களிலும் பேரிகார்டு வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையாக வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். 5 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
ஆஞ்சநேயர் ஜெயந்தி பெருவிழாவையொட்டி நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.