search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    • 15-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நடக்கிறது.
    • 21-ந் தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 5.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    விழாவின் 4-ம் திருநாளான வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.

    வருகிற 21-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    Next Story
    ×